இந்திய அணியின் ஆலோசகராக டோனி நியமிக்கப்பட்டதற்கு எதிராக புகார்


இந்திய அணியின் ஆலோசகராக டோனி நியமிக்கப்பட்டதற்கு எதிராக புகார்
x
தினத்தந்தி 9 Sep 2021 7:17 PM GMT (Updated: 2021-09-10T00:47:25+05:30)

உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியின் ஆலோசகராக டோனி நியமிக்கப்பட்டதற்கு எதிராக புகார்.

புதுடெல்லி,

7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியின் ஆலோசகராக முன்னாள் கேப்டனும், கடந்த ஆண்டு சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெற்றவருமான 40 வயது டோனி நியமிக்கப்பட்டு இருக்கிறார். இந்திய அணியின் வெற்றிகரமான கேப்டனாக விளங்கிய டோனியின் ஆலோசனை இந்திய அணி மீண்டும் உலக கோப்பையை வெல்ல உதவிகரமாக இருக்கும் என்று பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகிறார்கள். இந்த நிலையில் மத்தியபிரதேச கிரிக்கெட் சங்க முன்னாள் உறுப்பினர் சஞ்சீவ் குப்தா, டோனியின் நியமனம் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் புதிய விதிமுறைக்கு எதிரானது என்று புகார் தெரிவித்து இருக்கிறார். இது தொடர்பாக அவர் இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் கங்குலி, செயலாளர் ஜெய் ஷா உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு கடிதம் அனுப்பி இருக்கிறார். அதில், ‘ஒரு நபர் ஒரே நேரத்தில் ஆதாயம் பெறக்கூடிய 2 பதவிகளை வகிக்கக்கூடாது என கிரிக்கெட் வாரிய விதிமுறையில் இருக்கிறது’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார். ஐ.பி.எல். போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருக்கும் டோனி, இந்திய அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டு இருப்பது இந்த விதிமுறையை மீறிய செயலாகும் என்றும் தெரிவித்து இருக்கிறார்.

Next Story