கிரிக்கெட்

இந்திய கிரிக்கெட் அணியின் பிசியோதெரபிஸ்டுக்கு கொரோனா + "||" + Corona to the physiotherapist of the Indian cricket team

இந்திய கிரிக்கெட் அணியின் பிசியோதெரபிஸ்டுக்கு கொரோனா

இந்திய கிரிக்கெட் அணியின் பிசியோதெரபிஸ்டுக்கு கொரோனா
இந்திய கிரிக்கெட் அணியின் உதவி பிசியோதெரபிஸ்ட் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பதால் இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி நடைபெறுமா? என்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
மான்செஸ்டர்,

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. மழையால் பாதிக்கப்பட்ட முதலாவது டெஸ்ட் டிராவில் முடிந்தது. லண்டன் லார்ட்சில் நடந்த 2-வது டெஸ்டில் இந்திய அணி 151 ரன்கள் வித்தியாசத்திலும், லீட்சில் நடந்த 3-வது டெஸ்டில் இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 76 ரன்கள் வித்தியாசத்திலும், லண்டன் ஓவலில் நடந்த 4-வது டெஸ்டில் இந்திய அணி 157 ரன்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன. இதனால் இந்த தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.


இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மான்செஸ்டரில் உள்ள ஓல்டு டிராப்போர்ட் மைதானத்தில் இந்திய நேரப்படி இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 3.30 மணிக்கு தொடங்க திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் இந்த டெஸ்ட் போட்டி கொரோனா பாதிப்பு காரணமாக நடைபெறுமா? என்பது கேள்விக்குறியாகி இருக்கிறது.

மேலும் ஒருவருக்கு கொரோனா

லண்டன் ஓவலில் நடந்த 4-வது டெஸ்ட் போட்டியின் போது இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளரான 59 வயது ரவிசாஸ்திரிக்கு கடந்த சனிக்கிழமை கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த பந்து வீச்சு பயிற்சியாளர் பரத் அருண், பீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர் ஆகியோருக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது. இதனை அடுத்து அவர்கள் 3 பேரும் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கின்றனர். அத்துடன் அணியின் பிசியோதெரபிஸ்ட் நிதின் பட்டேல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தனிமைப்படுத்தப்பட்டார்.

இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் உதவி பிசியோதெரபிஸ்ட் யோகேஷ் பார்மருக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் அவர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி இருப்பது நேற்று முன்தினம் மாலை உறுதியானது. அவர் இந்திய அணி வீரர்களுடன் நெருங்கி பணியாற்றியதால் அணியினர் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அத்துடன் கொரோனா தடுப்பு வழிகாட்டுதல் நடைமுறைப்படி இந்திய அணியினர் அனைவரும் ஓட்டல் அறையில் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கின்றனர். இதனால் இந்திய அணியினர் யாரும் நேற்று பயிற்சியில் ஈடுபடவில்லை. பயிற்சி மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு அதிரடியாக ரத்து செய்யப்பட்டது. அடுத்த கட்டமாக என்ன நடவடிக்கை மேற்கொள்ளலாம் என்பது குறித்து இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியங்கள் ஆலோசனை நடத்தி வருகின்றன.

கங்குலி கருத்து

இந்திய அணியினருக்கு நடத்தப்பட்டு இருக்கும் கொரோனா பரிசோதனையின் முடிவை பொறுத்தே இன்று தொடங்க திட்டமிடப்பட்டு இருக்கும் இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான கடைசி டெஸ்ட் போட்டியின் தலைவிதி நிர்ணயமாகும் என்று இந்திய கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன. இருப்பினும் அடுத்து ஐ.பி.எல். தொடரின் எஞ்சிய ஆட்டம் (ஐக்கிய அரபு அமீரகத்தில் வருகிற 19-ந் தேதி முதல் அக்டோபர் 15-ந் தேதி வரை) மற்றும் 20 ஓவர் உலக கோப்பை போட்டிகள் அடுத்தடுத்து அரங்கேற இருப்பதால் இந்த டெஸ்ட் போட்டி திட்டமிட்டபடி நடைபெறுவது சந்தேகம் தான் என்று கூறப்படுகிறது.

இது குறித்து இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலியிடம் கேட்ட போது, ‘இந்த தருணத்தில் கடைசி டெஸ்ட் போட்டி நடைபெறுமா? என்பது குறித்து எங்களுக்கு தெரியாது’ என்று தெரிவித்தார்.
இந்திய அணி வீரர்களுக்கு கொரோனா பாதிப்பில்லை

இந்திய கிரிக்கெட் அணியின் உதவி பிசியோதெரபிஸ்ட் யோகேஷ் பார்மருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து இந்திய அணியினர் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதன் முடிவு நேற்று இரவு வெளியானது. இதில் இந்திய அணி வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்பதை குறிக்கும் ‘நெகட்டிவ்’ முடிவு வந்துள்ளது. இதனால் இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான கடைசி டெஸ்ட் இன்று தொடங்குவதற்கான வாய்ப்பு அதிகரித்து இருக்கிறது.



தொடர்புடைய செய்திகள்

1. மும்பையில் நேற்று 352 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
மும்பையில் இதுவரை கொரோனா பரிசோதனை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை 1 கோடியை தாண்டி உள்ளது.
2. அசாமில் இன்று 441 பேருக்கு கொரோனா; 338 பேர் டிஸ்சார்ஜ்
அசாமில் தற்போது 5,813 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
3. கர்நாடகத்தில் இன்று 1,414 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்தனர்
கர்நாடகாவில் தற்போது 13,741 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
4. கர்நாடகத்தில் இன்று 1,139 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்தனர்
கர்நாடகாவில் தற்போது 15,383 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
5. கேரளாவில் இன்று 19,653 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
கேரளாவில் தற்போது 1,73,631 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.