ஆப்கானிஸ்தான் கேப்டன் பதவியில் இருந்து ரஷித்கான் திடீர் விலகல்


ஆப்கானிஸ்தான் கேப்டன் பதவியில் இருந்து ரஷித்கான் திடீர் விலகல்
x
தினத்தந்தி 10 Sep 2021 7:23 PM GMT (Updated: 10 Sep 2021 7:23 PM GMT)

20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கான ஆப்கானிஸ்தான் அணி தேர்வில் தனது கருத்தை கேட்காததால் அதிருப்தி அடைந்த கேப்டன் ரஷித்கான் பதவியில் இருந்து திடீரென விலகினார்.

காபூல்,

16 அணிகள் பங்கேற்கும் 7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் (அக்டோபர்) 17-ந் தேதி முதல் நவம்பர் 14-ந் தேதி வரை ஓமன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளில் நடக்கிறது.

இதில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, வெஸ்ட்இண்டீஸ் ஆகிய 8 நாடுகள் நேரடியாக 2-வது சுற்றில் (சூப்பர் 12) விளையாடும். இந்த போட்டிக்கான வீரர்கள் பட்டியலை சமர்ப்பிக்க நேற்று கடைசி நாளாகும். இந்த போட்டிக்கான ஆப்கானிஸ்தான் அணி நேற்று முன்தினம் இரவு அறிவிக்கப்பட்டது.

ரஷித்கான் ராஜினாமா

இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் அணி அறிவிக்கப்பட்ட சில நிமிடங்களில் அந்த அணியின் கேப்டன் ரஷித்கான் தனது பதவியை திடீரென ராஜினாமா செய்தார்.

20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கான அணி தேர்வு குறித்து தேர்வு கமிட்டி மற்றும் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தன்னிடம் எந்த கருத்தையும் கேட்கவில்லை. அணி தேர்வில் கருத்து சொல்ல கேப்டனுக்கு உரிமை உண்டு. இதனால் கேப்டன் பதவியில் இருந்து உடனடியாக விலகுவதாக ரஷித்கான் ‘டுவிட்டர்’ மூலம் அறிவித்துள்ளார். ஆப்கானிஸ்தான் அணிக்காக நான் தொடர்ந்து விளையாடுவேன் என்றும் தேசிய அணிக்காக விளையாடுவதில் எப்பொழுதும் பெருமை அடைகிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 22 வயதான ரஷித்கான் உலகின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவர் ஆவார்.

புதிய கேப்டன் முகமது நபி

ரஷித்கான் விலகலை அடுத்து ஆப்கானிஸ்தான் அணியின் புதிய கேப்டனாக மூத்த ஆல்-ரவுண்டர் முகமது நபி நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார். நெருக்கடியான தருணத்தில் அணியை வழிநடத்த தயார் என்று 36 வயதான முகமது நபி தெரிவித்து இருக்கிறார்.

சமீப காலங்களில் அணியில் அங்கம் வகிக்காத முகமது ஷாசாத், ஷபூர் ஜட்ரன், தவ்லத் ஜட்ரன், ஹமித் ஹசன் ஆகியோர் அழைக்கப்பட்டு இருக்கின்றனர். மாற்று வீரர்களாக அப்சர் ஜஜாய், பரீத் அகமது ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கான ஆப்கானிஸ்தான் அணி வருமாறு:-

ரஷித் கான், முஜீப் உர் ரகுமான், ரக்மனுல்லா குர்பாஸ் (விக்கெட் கீப்பர்), கரிம் ஜனாத், ஹஸ்ரத்துல்லா ஜஜாய், குல்படின் நைப், உஸ்மான் கானி, நவீன் உல்-ஹக், ஆஷ்கர் ஆப்கன், ஹமித் ஹசன், முகமது நபி (கேப்டன்), ஷராபுதீன் அஷரப், நஜ்புல்லா ஜட்ரன், தவ்லத் ஜட்ரன், ஹஸ்மத்துல்லா ஷகிடி, ஷபூர் ஜட்ரன், முகமது ஷாசாத், காய்ஸ் அகமது.

தற்போது ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் கைவசம் ஆட்சி சென்றுள்ளது. அந்த நாட்டில் பெண்கள் கிரிக்கெட் விளையாட தடை விதிக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதனால் ஆப்கானிஸ்தான் அணியின் டெஸ்ட் அந்தஸ்தை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்க்கை எழுந்து இருக்கிறது. அடுத்த மாதம் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக நடக்க இருக்கும் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி விளையாடக்கூடாது என்று எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

Next Story