ஐபிஎல் போட்டிகளுக்காகவே 5-வது டெஸ்ட் போட்டி ரத்து: மைக்கேல் வாகன் விமர்சனம்


ஐபிஎல் போட்டிகளுக்காகவே 5-வது டெஸ்ட் போட்டி ரத்து: மைக்கேல் வாகன் விமர்சனம்
x
தினத்தந்தி 11 Sep 2021 8:27 AM GMT (Updated: 2021-09-11T13:57:24+05:30)

இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொரோனா அச்சம் காரணமாக ரத்து செய்யப்பட்டது.

மான்செஸ்டர்,

இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொரோனா அச்சம் காரணமாக ரத்து செய்யப்பட்டது.  இந்திய அணியின் உதவி பிசியோதெரபிஸ்ட் யோகேஷ் பார்மருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் அவர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி இருப்பது கடந்த புதன்கிழமை மாலை தெரியவந்தது. 

இதனை அடுத்து இந்திய அணியினர் நேற்று முன்தினம் பயிற்சியில் ஈடுபடாமல் தங்களது ஓட்டல் அறையிலேயே முடங்கினார்கள். இந்திய அணியினருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த பரிசோதனையின் முடிவு நேற்று முன்தினம் நள்ளிரவில் வெளியானது. 

இதில் இந்திய அணியினர் யாருக்கும் கொரோனா பாதிப்பில்லை என்று தெரியவந்ததால் கடைசி டெஸ்ட் போட்டி திட்டமிட்டப்படி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், போட்டி தொடங்குவதற்கு சில மணி நேரங்களே எஞ்சியிருந்த நிலையில், 5-வது டெஸ்ட் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ரத்து செய்யப்பட்ட போட்டியை வேறு ஒரு தேதியில் நடத்துவது குறித்து இருநாட்டு கிரிக்கெட் வாரியங்களும் ஆலோசிப்பதாக கூறப்படுகிறது. 

இந்தநிலையில், ஐபிஎல் போட்டி மற்றும் பணத்திற்காகவே 5-வது டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்பட்டதாக இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனும் கிரிக்கெட் வர்ணணையாளருமான மைக்கேல் வாகன் சாடியுள்ளார். இது குறித்து இங்கிலாந்து நாளிதழ் ஒன்றில் எழுதியுள்ள கட்டுரையில் மைக்கேல் வாகன் கூறியிருப்பதாவது;-  

நேர்மையாக இருக்கட்டும், இவை அனைத்தும் பணம் மற்றும் ஐபிஎல் போட்டிகளை பற்றியது. வீரர்களுக்கு கொரோனா தொற்றிக்கொள்ளும், ஐபிஎல் போட்டிகளில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டு விடும் என்ற அச்சத்தின் காரணமாகவே போட்டி ரத்து செய்யப்பட்டு இருக்கிறது.  கடைசி டெஸ்ட் போட்டிக்காக 11 வீரர்களை  இந்திய அணியால்  களம் இறக்க முடியவில்லை என்பதை என்னால் நம்ப  கடினமாக உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story