ஐ.பி.எல். போட்டி: இங்கிலாந்தில் இருந்து அமீரகம் வரும் வீரர்களை 6 நாட்கள் தனிமைப்படுத்த வேண்டும் - இந்திய கிரிக்கெட் வாரியம்


ஐ.பி.எல். போட்டி: இங்கிலாந்தில் இருந்து அமீரகம் வரும் வீரர்களை 6 நாட்கள் தனிமைப்படுத்த வேண்டும் - இந்திய கிரிக்கெட் வாரியம்
x
தினத்தந்தி 11 Sep 2021 10:26 PM GMT (Updated: 11 Sep 2021 10:29 PM GMT)

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பங்கேற்க இங்கிலாந்தில் இருந்து ஐக்கிய அரபு அமீரகம் வருகை தரும் ஒவ்வொரு வீரர்களையும் 6 நாட்கள் கட்டாயம் தனிமைப்படுத்த வேண்டும் என்று ஐ.பி.எல். அணி நிர்வாகங்களுக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் உத்தரவிட்டுள்ளது.

டெஸ்ட் கிரிக்கெட் ரத்து
இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையே மான்செஸ்டரில் நேற்று முன்தினம் தொடங்க இருந்த 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கொரோனா அச்சம் காரணமாக ரத்து செய்யப்பட்டது. இந்த டெஸ்ட் போட்டி பின்னாளில் வாய்ப்பு கிடைக்கும் போது நடத்தப்படும் என்று இரு நாட்டு கிரிக்கெட் வாரியங்களும் தெரிவித்துள்ளன.

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி, உதவி பயிற்சியாளர்கள் ஸ்ரீதர், பரத் அருண் ஆகியோர் கொரோனா தொற்று காரணமாக தனிமைப்படுத்தப்பட்டனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அணியின் பிசியோதெரபிஸ்ட் நிதின் பட்டேலும் தனிமைப்படுத்தப்பட்டார். இவர்களை தொடர்ந்து அணியின் உதவி பிசியோதெரபிஸ்ட் யாகேஷ் பார்மரும் கொரோனாவில் சிக்கியதால் இந்திய வீரர்கள் பீதிக்குள்ளாகி விட்டனர். இப்படியே போனால் கொரோனா தாக்கம் அணிக்குள் அதிகரிக்கலாம் என அஞ்சிய இந்திய வீரர்கள் தற்போதைய சூழலில் தங்களால் களம் இறங்க இயலாது என்று கூறியதால் வேறு வழியின்றி மான்செஸ்டர் டெஸ்டை ரத்து செய்ய வேண்டியதாகி விட்டது.கொரோனா பாதுகாப்பு தடுப்பு வளையத்தை மீறி ரவிசாஸ்திரி புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்றதன் விளைவே இந்திய அணிக்குள் கொரோனா ஊடுருவியதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

6 நாட்கள் தனிமை
திட்டமிட்டப்படி மான்செஸ்டர் டெஸ்ட் நடந்திருந்தால் வருகிற 14-ந்தேதி நிறைவடைந்திருக்கும். மறுநாள் அங்கிருந்து இரு அணி வீரர்களும் ஒன்றாக தனி விமானத்தில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்காக ஐக்கிய அரபு அமீரகத்துக்கு புறப்பட்டு இருப்பார்கள். ஏற்கனவே இங்கு கொரோனா தடுப்பு மருத்துவ உயிர் பாதுகாப்பு வளையத்திற்குள் (பயோ பபுள்) இருந்ததால் அமீரகம் சென்றதும் அங்கு உடனடியாக அடுத்த பாதுகாப்பு வளையத்திற்குள் இணைந்து இருப்பார்கள். இந்த வகையில் தான் ஏற்பாடுகளும் நடந்து வந்தன.ஆனால் எதிர்பாராத திருப்பமாக இந்திய அணிக்குள் கொரோனா அரக்கன் பரவி விட்டதால் இப்போது இந்திய கிரிக்கெட் வாரியம் சில அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

இதன்படி இங்கிலாந்தில் இருந்து ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் பங்கேற்க வரும் ஒவ்வொரு வீரர்களும் ‘பயோ-பபுள்’ வளையத்திற்குள் நுழைவதற்கு முன் 6 நாட்கள் கட்டாயம் தனிமைப்படுத்துதலை கடைபிடிக்க வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் உத்தரவிட்டுள்ளது. இதை ஐ.பி.எல். அணி நிர்வாகிகளிடம் இந்திய கிரிக்கெட் வாரியம் தெளிவுப்பட கூறியுள்ளது. தற்போதைய சூழலில் இங்கிலாந்தில் பின்பற்றப்பட்ட கொரோனா தடுப்பு பாதுகாப்பு வளையத்தில் இருந்து அப்படியே அமீரகத்துக்கு வந்து பாதுகாப்பு வளையத்திற்குள் வீரர்களை மாற்றுவதற்கு வாய்ப்பில்லை என்று இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

ரோகித் சர்மா வருகை
இந்த நிலையில் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் விளையாடுவதற்காக இந்திய முன்னணி வீரர்களான மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா, வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் தங்களது குடும்பத்தினருடன் தனிவிமானத்தில் மான்செஸ்டரில் இருந்து நேற்று அபுதாபி போய் சேர்ந்தனர். கிளம்பும் முன் எடுக்கப்பட்ட மருத்துவ பரிசோதனையிலும், அபுதாபி வந்தடைந்ததும் எடுக்கப்பட்ட பரிசோதனையிலும் அவர்கள் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என்பதை குறிக்கும் ‘நெகட்டிவ்’ முடிவு வந்துள்ளது. இருப்பினும் 6 நாட்கள் தனிமைப்படுத்துதல் நடைமுறையை முடித்த பிறகே அவர்கள் அணியினருடன் இணைய முடியும். அதுவரை அவர்கள் ஓட்டல் அறையிலேயே முடங்கி இருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி நிர்வாகம் கேப்டன் விராட் கோலி, வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் ஆகியோரை அழைத்து வர தனி விமானத்துக்கு ஏற்பாடு செய்துள்ளது. இருவரும் இன்று காலை துபாய் வந்தடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதே போல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சேர்ந்த ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்குர், புஜாரா ஆகியோரும் இன்று அமீரகம் திரும்புகிறார்கள். டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வீரர்கள் ரிஷாப் பண்ட், இஷாந்த் ஷர்மா, ரஹானே, பிரித்வி ஷா, உமேஷ் யாதவ், அக்‌ஷர் பட்டேல் உள்ளிட்டோர் இன்றிரவு துபாய் வந்தடைகிறார்கள்.

கொரோனாவால் பாதியில் நிறுத்தப்பட்ட 14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் எஞ்சிய ஆட்டங்கள் வருகிற 19-ந்தேதி முதல் அக்டோபர் 15-ந்தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய நகரங்களில் நடைபெறுகிறது. 19-ந்தேதி நடக்கும் தொடக்க ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்- சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. 8 அணிகளைச் சேர்ந்த பெரும்பாலான வீரர்கள் அங்கு பயிற்சியில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்து மூன்று முன்னணி வீரர்கள் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இருந்து விலகல்
இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்களான விக்கெட் கீப்பர் ஜானி பேர்ஸ்டோ (ஐதராபாத் சன்ரைசர்ஸ்), 20 ஓவர் கிரிக்கெட்டின் ‘நம்பர் ஒன்’ பேட்ஸ்மேன் டேவிட் மலான் (பஞ்சாப் கிங்ஸ்), ஆல்-ரவுண்டர் கிறிஸ் வோக்ஸ் (டெல்லி கேப்பிட்டல்ஸ்) ஆகியோர் சொந்த காரணங்களுக்காக வருகிற 19-ந்தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கும் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர். தனிப்பட்ட காரணங்களுக்காக எஞ்சிய ஐ.பி.எல்.-ல் விளையாடவில்லை என்று அவர்கள் கூறினாலும், அமீரகத்தில் 6 நாட்கள் கட்டாயம் தனிமைப்படுத்துதலை கடைபிடிக்க வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் திடீரென கடுமையான உத்தரவை பிறப்பித்திருப்பது அவர்களை பாதித்து இருப்பதாக கிரிக்கெட் வாரிய மூத்த நிர்வாகி தெரிவித்தார். ஆரம்பத்தில் இத்தகைய தனிமைப்படுத்துதல் அவசியம் இல்லை என்று கூறப்பட்டு இருந்தது. ஆனால் தற்போது இந்திய அணியின் பயிற்சி குழுவினர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதால் இந்திய கிரிக்கெட் வாரியம் தனது முடிவை மாற்றிக்கொண்டது.

இந்த 3 வீரர்களும் 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கான இங்கிலாந்து அணியில் அங்கம் வகிக்கிறார்கள். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரிலும் இடம் பெறுவதற்கு வாய்ப்புள்ளது. ஏற்கனவே ஜோஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ், ஜோப்ரா ஆர்ச்சர் ஆகிய இங்கிலாந்து நட்சத்திர வீரர்கள் ஒதுங்கிய நிலையில், மேலும் 3 முன்னணி வீரர்கள் ஐ.பி.எல்.-ல் இருந்து பின்வாங்கி இருப்பது சம்பந்தப்பட்ட அணிகளுக்கு பின்னடைவாக கருதப்படுகிறது. பஞ்சாப் அணி டேவிட் மலானுக்கு பதிலாக தென்ஆப்பிரிக்க பேட்ஸ்மேன் எய்டன் மார்க்ராமை ஒப்பந்தம் செய்துள்ளது. மற்ற இருவருக்கு பதிலாக சரியான மாற்று வீரர்களை அணி நிர்வாகம் தேடி வருகிறது.

அதே சமயம் மொயீன் அலி, சாம் பில்லிங்ஸ், சாம் கர்ரன், டாம் கர்ரன், ஜார்ஜ் கார்டன், மோர்கன், கிறிஸ் ஜோர்டான், அடில் ரஷித், லிவிங்ஸ்டன், ஜாசன் ராய் ஆகிய இங்கிலாந்து வீரர்கள் ஐ.பி.எல். தொடரில் ஆடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story