5-வது டெஸ்ட் ரத்து விவகாரம்: ஐ.சி.சி. தலையிட இங்கிலாந்து கோரிக்கை


5-வது டெஸ்ட் ரத்து விவகாரம்: ஐ.சி.சி. தலையிட இங்கிலாந்து கோரிக்கை
x
தினத்தந்தி 12 Sep 2021 10:01 PM GMT (Updated: 12 Sep 2021 10:01 PM GMT)

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிய விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது.

முதல் 4 டெஸ்டுகளில் இந்தியா 2 போட்டியிலும், இங்கிலாந்து ஒரு போட்டியிலும் வெற்றி பெற்றது. மற்றொரு டெஸ்ட் ‘டிரா’ ஆனது. இதனால் இந்தியா 2-1 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகித்தது. இவ்விரு அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கடந்த 10-ந்தேதி மான்செஸ்டரில் தொடங்க இருந்த நிலையில் இந்திய அணியின் பயிற்சியாளர் 3 பேருக்கும், பிசியோதெரபிஸ்டுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டதால் இந்திய வீரர்கள் கலக்கமடைந்தனர். இந்திய வீரர்கள் யாருக்கும் கொரோனா தொற்று இல்லை என்றாலும் அவர்கள் களம் இறங்க தயங்கியதால் இந்த டெஸ்ட் ரத்து செய்யப்பட்டது. டெஸ்டில் ஆடும்படி இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் வற்புறுத்திய போதிலும் இந்திய வீரர்கள் செவிசாய்க்கவில்லை. ரத்தான இந்த டெஸ்ட் வேறொரு நாளில் நடத்தப்படும் என்று கிரிக்கெட் வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.இருப்பினும் 5-வது டெஸ்ட் ரத்து விவகாரத்தில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி). உறுதியான முடிவை எடுக்க கோரி இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் கடிதம் எழுதியுள்ளது. ஐ.சி.சி. விதிப்படி, கொரோனா அச்சத்தை சுட்டிகாட்டி இந்த டெஸ்ட் கைவிடப்பட்டால் இந்திய அணி தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியதாகி விடும். இங்கிலாந்துக்கு பெரிய அளவில் இழப்பீடு ஏற்படும். மாறாக இந்திய அணி களம் இறங்க மறுத்ததால் தண்டிக்கும் விதமாக இங்கிலாந்து இந்த டெஸ்டில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டால் இங்கிலாந்து தொடரை 2-2 என்ற கணக்கில் சமன் செய்து விடும். அத்துடன் இன்சூரன்ஸ் தொகையாக ஏறக்குறைய ரூ.406 கோடியை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் பெற்று விடும்.

ஐ.சி.சி.யின் சர்ச்சை தீர்வு கமிட்டி இந்த விவகாரத்தில் தலையிட்டு முடிவு காண வேண்டும், அது தங்களுக்கு சாதகமாக இருக்க வேண்டும் என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் விரும்புகிறது.

Next Story