இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான கடைசி டெஸ்ட் ரத்து செய்யப்பட்டதற்கு ஐ.பி.எல். காரணம் கிடையாது: கங்குலி


இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான கடைசி டெஸ்ட் ரத்து செய்யப்பட்டதற்கு ஐ.பி.எல். காரணம் கிடையாது: கங்குலி
x
தினத்தந்தி 13 Sep 2021 10:05 PM GMT (Updated: 13 Sep 2021 10:05 PM GMT)

இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ரத்து செய்யப்பட்டதற்கு ஐ.பி.எல். தொடர் காரணம் கிடையாது என்று இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் கங்குலி தெரிவித்தார்.

கடைசி டெஸ்ட் ரத்து
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிய விராட்கோலி தலைமையிலான இந்திய அணி 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. முதல் 4 டெஸ்டுகளில் இந்தியா 2 போட்டியிலும், இங்கிலாந்து ஒரு போட்டியிலும் வெற்றி பெற்றது. ஒரு டெஸ்ட் டிரா ஆனது. இதனால் இந்தியா 2-1 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகித்தது.

இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் கடந்த 10-ந் தேதி தொடங்க இருந்தது. இந்திய அணியின் பயிற்சியாளர்கள் 3 பேருக்கும், உதவி பிசியோதெரபிஸ்டுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் பீதியடைந்த இந்திய வீரர்கள் களம் இறங்க தயக்கம் காட்டியதால் இந்த டெஸ்ட் ரத்து செய்யப்பட்டது. ரத்தான இந்த டெஸ்ட் பின்னர் நடைபெறும் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் அதிருப்தி அடைந்து இருக்கும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலையிட்டு உறுதியான முடிவு எடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து இருக்கிறது. மேலும் ஐக்கிய அரபு அமீரகத்தில் வருகிற 19-ந் தேதி தொடங்கும் ஐ.பி.எல். தொடரின் எஞ்சிய ஆட்டத்தை கருத்தில் கொண்டு தான் இந்திய அணி கடைசி டெஸ்டில் விளையாட மறுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

கங்குலி கருத்து
இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலி நேற்று அளித்த ஒரு பேட்டியில், ‘இங்கிலாந்தில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள கிரிக்கெட் வாரியத்திடம் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி (இங்கிலாந்து தொடரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்) அனுமதி பெறவில்லை. அதற்காக அவர் மீது நடவடிக்கை எடுக்கும் திட்டம் எதுவுமில்லை. ஓட்டல் அறைக்குள் எவ்வளவு நாட்கள் முடங்கியிருக்க முடியும். ஓட்டல், மைதானத்தை தவிர வேறு எங்கும் செல்லக்கூடாது என்று யாரையும் கட்டுப்படுத்த முடியாது. அப்படி செயல்படுவது என்பது மனிதனால் முடியாத காரியமாகும்.

கடைசி டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்பட்டதற்கு ஐ.பி.எல். போட்டி எந்தவகையிலும் காரணம் கிடையாது. அணியின் உதவி பிசியோதெரபிஸ்ட் யோகேஷ் பார்மருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் இந்திய வீரர்கள் அச்சம் அடைந்து களம் இறங்க மறுத்தனர். ஏனெனில் பிசியோதெரபிஸ்டுடன் வீரர்கள் நெருங்கி பழகியதால் தங்களுக்கு பாதிப்பு ஏற்படுமோ? என்று கலக்கம் அடைந்தனர். அவர்கள் மீது குற்றம்சுமத்த முடியாது. அவர்களுடைய உணர்வுக்கு நீங்கள் மதிப்பளிக்க வேண்டும். இந்திய கிரிக்கெட் வாரியம் ஒருபோதும் பொறுப்பற்ற முறையில் செயல்படாது. மற்ற நாட்டு கிரிக்கெட் வாரியங்களின் நலனையும் நாங்கள் மதிக்கிறோம். ரத்து செய்யப்பட்ட டெஸ்டை தனி போட்டியாக கருதாமல் இங்கிலாந்து தொடரின் 5-வது மற்றும் கடைசி போட்டியாக நடத்தவே நாங்கள் விரும்புகிறோம்’ என்று தெரிவித்தார்.

Next Story