ஐ.பி.எல். புதிய அணிக்கான ஏலத்தை அடுத்த மாதம் 17-ந்தேதி நடத்த முடிவு?


ஐ.பி.எல். புதிய அணிக்கான ஏலத்தை அடுத்த மாதம் 17-ந்தேதி நடத்த முடிவு?
x
தினத்தந்தி 14 Sep 2021 10:29 PM GMT (Updated: 14 Sep 2021 10:29 PM GMT)

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இரண்டு புதிய அணிக்கான ஏலம் அடுத்த மாதம் 17-ந்தேதி நடத்தப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஐ.பி.எல்.-ல் புதிய அணிகள்
அடுத்த ஆண்டு நடைபெறும் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் போது கூடுதலாக இரண்டு அணிகளை சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் 2022-ம் ஆண்டு ஐ.பி.எல். தொடரின் போது அணிகளின் எண்ணிக்கை 10 ஆக உயரப்போகிறது. புதிய அணியை வாங்க விரும்பும் நிறுவனங்களுக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் டெண்டர் விண்ணப்பம் வினியோகிக்கப்பட்டு வருகிறது. வருகிற 5-ந்தேதி வரை விண்ணப்பத்தை வாங்கிக் கொள்ளலாம்.இந்த நிலையில் புதிய இரு அணி உரிமத்துக்கான ஏலத்தை அடுத்த மாதம் (அக்டோபர்) 17-ந்தேதி நடத்த இந்திய கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளதாக கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர் நேற்று தெரிவித்தார். அதாவது 14-வது ஐ.பி.எல். போட்டி முடிந்து 2 நாட்களில் புதிய அணிகள் எவை? என்ற விவரம் வெளியாகும். இதற்கான நிகழ்ச்சி துபாய் அல்லது மஸ்கட்டில் நடைபெற வாய்ப்பு உள்ளது.டெண்டர் விண்ணப்பத்தில் எந்த நிறுவனங்கள் விதிமுறைக்குட்பட்டு அதிக தொகையை குறிப்பிட்டு சமர்ப்பிக்கிறதோ அந்த நிறுவனத்துக்கு புதிய அணிக்கான உரிமம் வழங்கப்படும்.

ஆமதாபாத்-லக்னோ
அணியின் அடிப்படை விலை ரூ.2 ஆயிரம் கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இரு அணிகளையும் சேர்த்து ஏறக்குறைய ரூ.5 ஆயிரம் கோடி வருமானத்தை இந்திய கிரிக்கெட் வாரியம் எதிர்பார்க்கிறது. லக்னோ, ஆமதாபாத், இந்தூர், கட்டாக், கவுகாத்தி, தர்மசாலா ஆகிய 6 நகரங்களில் இருந்து ஏதாவது இரண்டு இடங்களை தலைமையிடமாக கொண்ட புதிய அணிகள் உருவாக்கப்படும் என்று தெரிகிறது. ஆர்.பி.எஸ்.ஜி. குரூப் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா, லக்னோவை மையப்படுத்தி அணியை வாங்க விரும்புவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.மேலும் இரு அணிகள் இணைய இருப்பதால் இனி ஒவ்வொரு அணியும் 14 அல்லது 18 லீக் ஆட்டங்களில் விளையாட வேண்டி இருக்கும். இதையொட்டி அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ஐ.பி.எல். வீரர்களின் மெகா ஏலம் நடத்தப்படுகிறது.

Next Story