20 ஓவர் கிரிக்கெட் தரவரிசை: தென்ஆப்பிரிக்க வீரர் டி காக் முன்னேற்றம்


20 ஓவர் கிரிக்கெட் தரவரிசை: தென்ஆப்பிரிக்க வீரர் டி காக் முன்னேற்றம்
x
தினத்தந்தி 15 Sep 2021 10:06 PM GMT (Updated: 15 Sep 2021 10:06 PM GMT)

சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட் தரவரிசையில் தென்ஆப்பிரிக்க வீரர் டி காக் முன்னேறினார்.

துபாய்,

சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட் வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நேற்று வெளியிட்டது. இதில் பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் தென்ஆப்பிரிக்க அணியின் விக்கெட் கீப்பர் குயின்டான் டி காக் 4 இடங்கள் முன்னேறி 8-வது இடத்தை பிடித்துள்ளார். நேற்று முன்தினம் நிறைவடைந்த இலங்கைக்கு எதிரான 20 ஓவர் தொடரில் 3 ஆட்டங்களில் ஆடி 153 ரன்கள் எடுத்து தொடரை கைப்பற்ற வித்திட்டதன் மூலம் அவருக்கு இந்த ஏற்றம் கிடைத்துள்ளது. 

20 ஓவர் பேட்டிங் தரவரிசையில் டாப்-10 இடத்திற்குள் அவர் நுழைவது இதுவே முதல் முறையாகும். இந்திய கேப்டன் விராட் கோலி ஒரு இடம் முன்னேறி 4-வது இடத்தை பிடித்துள்ளார். மற்றொரு இந்திய வீரர் லோகேஷ் ராகுல் 6-வது இடத்தில் உள்ளார். டாப்-3 இடங்களில் டேவிட் மாலன் (இங்கிலாந்து), பாபர் அசாம் (பாகிஸ்தான்), ஆரோன் பிஞ்ச் (ஆஸ்திரேலியா) மாற்றமின்றி நீடிக்கிறார்கள்.

பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் முதல் 7 இடங்களை ஆக்கிரமித்துள்ள சுழற்பந்து வீச்சாளர்கள் மாற்றமின்றி அப்படியே நீடிக்கிறார்கள். முதலிடத்தில் ஷம்சியும் (தென்ஆப்பிரிக்கா), 2-வது இடத்தில் ஹசரங்காவும் (இலங்கை) உள்ளனர். இந்திய தரப்பில் அதிகபட்சமாக புவனேஷ்வர்குமார் 12-வது இடம் வகிக்கிறார்.

Next Story