பாதியில் நிறுத்தப்பட்டு நாளை மீண்டும் தொடங்கும் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் 8 அணிகளின் நிலை என்ன?


பாதியில் நிறுத்தப்பட்டு நாளை மீண்டும் தொடங்கும் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் 8 அணிகளின் நிலை என்ன?
x
தினத்தந்தி 17 Sep 2021 9:37 PM GMT (Updated: 17 Sep 2021 9:37 PM GMT)

கொரோனா அச்சத்தால் பாதியில் நிறுத்தப்பட்டு நாளை மீண்டும் தொடங்க உள்ள ஐ.பி.எல். கிரிக்கெட்டில் 8 அணிகளும் எத்தகைய நிலையில் உள்ளது என்பதை பார்க்கலாம்.

துபாய்,

14-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இந்தியாவில் சென்னை, மும்பை உள்ளிட்ட நகரங்களில் கடந்த ஏப்ரல் மாதம் 9-ந்தேதி தொடங்கியது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு அப்போது உச்சத்தில் இருந்ததால் ரசிகர்கள் அனுமதிக்கப்படவில்லை. வீரர்கள், கொரோனா தடுப்பு மருத்துவ பாதுகாப்பு வளையத்திற்குள் (பயோ பபுள்) தங்களை இணைத்து போட்டியில் பங்கேற்றனர். பாதுகாப்பு வளையத்தை மீறி யாரும் வெளியே சென்றாலோ, வெளியாட்களுடன் நேரடி தொடர்பு வைத்தாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. முதல் 29 ஆட்டங்கள் எந்தவித சலசலப்பும் இன்றி நடந்து முடிந்தது. அதன் பிறகு திடீரென 4 அணிக்குள் கொரோனா அரக்கன் ஊடுருவியது. சில வீரர்கள் கொரோனா தொற்றுக்குள்ளானதால் வேறு வழியின்றி மே 3-ந்தேதியுடன் ஐ.பி.எல். போட்டி நிறுத்தப்பட்டு காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.

மீதமுள்ள ஆட்டங்களை நடத்த முடியாமல் போனால் ஏறக்குறைய ரூ.2500 கோடி இழப்பு ஏற்படும் என்று கருதிய இந்திய கிரிக்கெட் வாரியம் அதை ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றியது. அங்குள்ள துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய நகரங்களில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் அக்டோபர் 15-ந்தேதி வரை எஞ்சிய 31 ஆட்டங்கள் நடத்தப்படுகிறது.2-வது கட்ட ஐ.பி.எல்.-ல் துபாயில் நாளை இரவு 7.30 மணிக்கு நடக்கும் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி, சென்னை சூப்பர் கிங்சுடன் மல்லுகட்டுகிறது.

4 மாதங்கள் இடைவெளிக்கு பிறகு மீண்டும் ஐ.பி.எல். தொடங்குவதால் சில மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. ஜோஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ் (இருவரும் ராஜஸ்தான்), பேர்ஸ்டோ (ஐதராபாத்), கிறிஸ் வோக்ஸ் (டெல்லி), டேவிட் மலான், ஜய் ரிச்சர்ட்சன், ரிலி மெரிடித் (3 பேரும் பஞ்சாப்), கேன் ரிச்சர்ட்சன், ஆடம் ஜம்பா (2 பேரும் பெங்களூரு), பேட் கம்மின்ஸ் (கொல்கத்தா) உள்ளிட்ட வெளிநாட்டு வீரர்கள் சொந்த காரணங்களுக்காக எஞ்சிய ஐ.பி.ல். போட்டிகளில் இருந்து விலகி விட்டனர். அவர்களுக்கு பதிலாக மாற்று வீரர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதில் ‘நம்பர் ஒன்’ சுழற்பந்து வீச்சாளர் தென்ஆப்பிரிக்காவைச் சேர்ந்த தப்ரைஸ் ஷம்சி (ராஜஸ்தான்), இலங்கை சுழற்பந்து வீச்சாளர் ஹசரங்கா (பெங்களூரு), தென்ஆப்பிரிக்க பேட்ஸ்மேன் மார்க்ராம் (பஞ்சாப்), வெஸ்ட் இண்டீஸ் அதிரடி புயல் இவின் லீவிஸ் (ராஜஸ்தான்), டிம் சவுதி (கொல்கத்தா) போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர்.

அமீரக ஆடுகளங்கள் பெரும்பாலும் வேகம் குறைந்தவை. அதனால் இங்கு சுழற்பந்து வீச்சின் தாக்கம் கணிசமாக இருக்கும் என்பதால் அதற்கு ஏற்ப ஒவ்வொரு அணிகளும் வியூகங்களை மாற்றி அமைத்து வருகின்றன. அதற்கு முன்பாக இதுவரை நடந்துள்ள 29 ஆட்டங்கள் பற்றிய ஒரு அலசலை இங்கு பார்க்கலாம்:-

கடந்த ஆண்டு சொதப்பிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7-வது இடத்துக்கு தள்ளப்பட்டது. ஆனால் இந்த சீசனில் புதிய வீரர்களின் வருகையால் எழுச்சி பெற்றது. குறிப்பாக மறுபிரவேசம் செய்த சுரேஷ் ரெய்னா, ஆல்-ரவுண்டர் மொயீன் அலி சரியான பேட்டிங் கலவைக்கு வலுசேர்த்துள்ளனர். கேப்டன் டோனி பேட்டிங்கில் சோபிக்காவிட்டாலும் விக்கெட் கீப்பிங்கிலும், கேப்டன்ஷிப்பிலும் அசத்துகிறார். முதல் 7 ஆட்டங்களில் 5-ல் வெற்றி பெற்றுள்ள சென்னை அணி 2 ஆட்டங்களில் தோல்வி அடைந்தது. இதில் மும்பை இந்தியன்சுக்கு எதிரான ஆட்டத்தில் 218 ரன்கள் குவித்தும், இறுதி கட்டத்தில் பொல்லார்ட்டின் அதிரடி மிரட்டலால் (34 பந்தில் 87 ரன்) கடைசி பந்தில் வெற்றியை நழுவ விட்டது. இன்னும் 3 ஆட்டங்களில் வெற்றி பெற்றால் ‘பிளே-ஆப்’ சுற்றை எட்டி விடலாம் என்ற முனைப்புடன் சென்னை அணி ஆயத்தமாகி வருகிறது. பாப் டு பிளிஸ்சிஸ் 7 ஆட்டத்தில் 4 அரைசதம் உள்பட 320 ரன்கள் சேர்த்துள்ளார். சமீபத்தில் கரிபியன் பிரிமீயர் லீக் கிரிக்கெட்டில் சதம் அடித்த பிளிஸ்சிஸ் பார்மில் இருப்பது அணிக்கு மகிழ்ச்சியான விஷயமாகும்.

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 12 புள்ளிகளுடன் (6 வெற்றி, 2 தோல்வி) முதலிடத்தில் நீடிக்கிறது. இளம் கேப்டன் ரிஷாப் பண்ட் தலைமையில் முதற்கட்ட சீசனில் பிரமாதமாக ஆடிய டெல்லி அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் ஷிகர் தவான் (8 ஆட்டத்தில் 3 அரைசதத்துடன் 380 ரன்), பிரித்வி ஷா (308 ரன்) கூட்டணி வெற்றிக்கு முதுகெலும்பாக திகழ்ந்தது. தோள்பட்டை காயத்தால் முதல் சீசனில் ஆடாத முன்னாள் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யரின் வருகை அந்த அணியை மேலும் பலப்படுத்தியுள்ளது. மேலும் முதற் கட்ட தொடரில் குடும்பத்தினருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் பாதியில் விலகிய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினும் எஞ்சிய போட்டிகளில் முழுமையாக விளையாட உள்ளார்.

இதுவரை ஐ.பி.எல். கோப்பையை வெல்லாத விராட் கோலி தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி முதல் 4 ஆட்டங்களில் வரிசையாக வெற்றிகளை குவித்தது. அடுத்த 3 ஆட்டங்களில் 2-ல் தோல்வியை தழுவியது. இருப்பினும் 10 புள்ளிகளுடன் பட்டியலில் நல்ல நிலையிலேயே இருக்கிறது. டிவில்லியர்ஸ் (207 ரன்), கேப்டன் விராட் கோலி (198 ரன்), தேவ்தத் படிக்கல் (ஒரு சதத்துடன் 195 ரன்), மேக்ஸ்வெல் (223 ரன்) ஆகியோர் பெங்களூரு அணியின் பேட்டிங் தூண்களாக உள்ளனர். பந்து வீச்சில் வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷல் பட்டேல் 17 விக்கெட்டுகளுடன் முதலிடத்தில் இருக்கிறார். அதே சமயம் சிக்கனமாக பந்துவீசுவதில் கில்லாடியான சுழற்பந்து வீச்சாளர் வாஷிங்டன் சுந்தர் காயத்தால் விலகியது சற்று பின்னடைவாகும். இந்திய 20 ஓவர் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலக முடிவெடுத்திருக்கும் கோலி, ஐ.பி.எல். கோப்பை ஏக்கத்தை தணிக்காவிட்டால் இங்கும் அவரது கேப்டன் பதவிக்கு ஆபத்தாகி விடும்.

வழக்கம் போல் தோல்வியுடன் தொடங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி மீண்டு (7 ஆட்டத்தில் 4-ல் வெற்றி) வந்து விட்டது. நட்சத்திர பட்டாளங்களை உள்ளடக்கிய ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி ஏறக்குறைய அப்படியே களம் இறங்குகிறது. ரோகித் சர்மா, பொல்லார்ட, சூர்யகுமார் யாதவ், குயின்டான் டி காக், ஹர்திக்பாண்ட்யா உள்ளிட்டோர் பேட்டிங்கிலும், ஜஸ்பிரித் பும்ரா, டிரென்ட் பவுல்ட், ராகுல் சாஹர் ஆகியோர் பந்து வீச்சிலும் மிரட்டக்கூடியவர்கள் என்பதால் மும்பை இந்தியன்ஸ் அணி தனது பயணத்தை கம்பீரமாக தொடங்கும் ஆவலில்உள்ளது.

சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ், லோகேஷ் ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணிகள் தலா 3 வெற்றிகளுடன் 5-வது, 6-வது இடங்களில் உள்ளன. பென் ஸ்டோக்ஸ், ஐதராபாத்துக்கு எதிரான ஆட்டத்தில் 124 ரன்கள் குவித்த ஜோஸ் பட்லர் ஆகியோரின் விலகல் நிச்சயம் ராஜஸ்தான் அணிக்கு பின்னடைவு தான். நடப்பு தொடரில் முதல் சதம் அடித்தவரான சஞ்சு சாம்சன், ரூ.16¼ கோடிக்கு ஏலம் போன கிறிஸ் மோரிஸ், டேவிட் மில்லர், லிவிங்ஸ்டன், ஷிவம் துபே ஆகியோரைத் தான் ராஜஸ்தான் அதிகமாக நம்பி இருக்கிறது.

பஞ்சாப் அணியில் கேப்டன் லோகேஷ் ராகுல், மயங்க் அகர்வால் நிகோலஸ் பூரன், கிறிஸ் கெய்ல், ஷாருக்கான் என்று கவனத்தை ஈர்க்கும் வீரர்களுக்கு பஞ்சமில்லை. ஆனால் முதல் பகுதியில் விக்கெட் கீப்பர் நிகோலஸ் பூரன் 7 ஆட்டங்களில் வெறும் 28 ரன் மட்டுமே எடுத்தது பாதிப்பை ஏற்படுத்தியது. பின்வரிசையில் அவர் அணியை தூக்கி நிறுத்த வேண்டியது அவசியமாகும். சமீபத்தில் நிறைவடைந்த கரிபியன் பிரிமீயர் லீக் கிரிக்கெட்டில் 11 ஆட்டங்களில் 25 சிக்சர் உள்பட 263 ரன்கள் எடுத்த பூரன், அதே பார்மை ஐ.பி.எல். போட்டியிலும் தொடர்வாரா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

இயான் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 7 ஆட்டங்களில் விளையாடி 2 வெற்றி, 5 தோல்வியுடன் 7-வது இடத்தில் இருக்கிறது. ஒரு ஆட்டத்தில் கூட பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் ஒரு சேர சிறப்பாக செயல்பட முடியாமல் தடுமாறியதாக மோர்கன் முதல் பகுதியில் புலம்பினார். மேலும் ஒரு இடியாக பிரதான வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் ‘ஜகா’ வாங்கி விட்டார். முதல் 7 ஆட்டங்களில் நிதிஷ் ராணா (201 ரன்) தவிர மற்றவர்களின் பேட்டிங் பெரிய அளவில் இல்லை. கேப்டன் மோர்கன், தினேஷ் கார்த்திக், ஆந்த்ரே ரஸ்செல், சுப்மான் கில், ஷகிப் அல்-ஹசன் உள்ளிட்டோர் ரன்வேட்டை நடத்தினால் அந்த அணி புள்ளி பட்டியலில் முன்னேற்றம் காணலாம்.

முன்னாள் சாம்பியனான ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணி 7 ஆட்டங்களில் ஒன்றில் மட்டுமே வெற்றி கண்டு 2 புள்ளியுடன் கடைசி இடத்தில் உள்ளது.. மோசமான பேட்டிங், கேப்டன்ஷிப் எதிரொலியாக கேப்டன் பதவியை டேவிட் வார்னர் இழந்தார். கேன் வில்லியம்சன் வழிநடத்துகிறார். இருப்பினும் வார்னருக்கு அணியில் இடம் உண்டு. ஜானி பேர்ஸ்டோ (7 ஆட்டத்தில் 15 சிக்சருடன் 248 ரன்) விலகல் ஐதராபாத்துக்கு மேலும் ஒரு சறுக்கலாகும். அந்த அணி எஞ்சிய 7 ஆட்டங்களில் குறைந்தது 6-ல் வெற்றி பெற்றால் தான் ‘பிளே-ஆப்’ சுற்று வாய்ப்பை நினைத்து பார்க்க முடியும் என்ற நெருக்கடியுடன் 2-வது கட்ட சவாலை தொடங்க உள்ளது.

Next Story