கிரிக்கெட்

கொரோனா பாதிப்பால் பாதியில் நிறுத்தப்பட்ட ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இன்று மீண்டும் தொடக்கம் - சென்னை-மும்பை அணிகள் துபாயில் மோதல் + "||" + IPL halted in half due to corona injury Cricket match resumes today - Chennai-Mumbai clash in Dubai

கொரோனா பாதிப்பால் பாதியில் நிறுத்தப்பட்ட ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இன்று மீண்டும் தொடக்கம் - சென்னை-மும்பை அணிகள் துபாயில் மோதல்

கொரோனா பாதிப்பால் பாதியில் நிறுத்தப்பட்ட ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இன்று மீண்டும் தொடக்கம் - சென்னை-மும்பை அணிகள் துபாயில் மோதல்
கொரோனா வைரஸ் ஊடுருவலால் பாதியில் நிறுத்தப்பட்ட ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இன்று மீண்டும் தொடங்குகிறது. துபாயில் நடக்கும் தொடக்க ஆட்டத்தில் சென்னை-மும்பை அணிகள் மோதுகின்றன.
துபாய்,

14-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த ஏப்ரல் மாதம் 9-ந்தேதி தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வந்த நிலையில் 4 அணிகளைச் சேர்ந்த சில வீரர்கள் கொரோனா தொற்றுக்குள்ளானதால் மே 3-ந்தேதியுடன் ஐ.பி.எல். போட்டி காலவரையின்றி தள்ளிவைக்கப்பட்டது. அதுவரை 29 லீக் ஆட்டங்கள் நடந்து முடிந்திருந்தது.

இந்த நிலையில் மீதமுள்ள 31 ஆட்டங்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய நகரங்களுக்கு மாற்றப்பட்டு 4 மாதங்களுக்கு பிறகு இன்று (ஞாயிற்றுக்கிழமை) மீண்டும் தொடங்குகிறது. இதில் பங்கேற்றுள்ள நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், ஐதராபாத் சன்ரைசர்ஸ் ஆகிய 8 அணிகளும் தங்களுக்குள் தலா 2 முறை மோத வேண்டும். இதன்படி ஒவ்வொரு அணிகளும் தலா 14 லீக் ஆட்டங்களில் விளையாட வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறும்.

14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவின் 2-வது கட்ட பகுதியில் துபாயில் இன்று நடக்கும் தொடக்க ஆட்டத்தில் (அதாவது 30-வது லீக் ஆட்டம்) 5 முறை சாம்பியனான ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி, முன்னாள் சாம்பியன் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்சுடன் மல்லுகட்டுகிறது.

புள்ளி பட்டியலில் 5 வெற்றி, 2 தோல்வி என்று 10 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ள சென்னை அணி இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால் மறுபடியும் முதலிடத்துக்கு முன்னேறி விடலாம். இவ்விரு அணிகளும் ஏற்கனவே டெல்லியில் சந்தித்த லீக்கில் சென்னை அணி 218 ரன்கள் குவித்த போதிலும், அதை கீரன் பொல்லார்ட்டின் (34 பந்தில் 8 சிக்சருடன் 87 ரன்) அதிரடியால் மும்பை அணி கடைசி பந்தில் எட்டிப்பிடித்தது. அந்த தோல்விக்கு பழிதீர்த்து அமீரக சீசனை சென்னை அணி வெற்றியோடு தொடங்குமா? என்று ரசிகர்கள் ஆவல் கொண்டுள்ளனர்.

சென்னை அணியில் அங்கம் வகிக்கும் இங்கிலாந்து ஆல்- ரவுண்டர் சாம் கர்ரனுக்கு 6 நாள் தனிமைப்படுத்துதல் நிறைவடையாததால் அவர் இன்று களம் இறங்க வாய்ப்பில்லை. இதே போல் வெஸ்ட் இண்டீசில் நடந்த கரிபியன் பிரிமீயர் லீக் கிரிக்கெட்டில் விளையாடிய போது இடுப்பு பகுதியில் காயமடைந்த பேட்ஸ்மேன் பாப் டு பிளிஸ்சிஸ் அதில் இருந்து இன்னும் முழுமையாக மீளவில்லை. இதனால் அவருக்கு இடம் கிடைக்காது என்றே தெரிகிறது. முதல் 7 ஆட்டங்களில் 4 அரைசதத்துடன் 320 ரன்கள் சேர்த்திருந்த பிளிஸ்சிஸ்சின் காயம் நிச்சயம் சென்னை அணிக்கு கொஞ்சம் பின்னடைவு தான். இருப்பினும் சுரேஷ் ரெய்னா, மொயீன் அலி, ருதுராஜ் கெய்க்வாட், ரவீந்திர ஜடேஜா, அம்பத்தி ராயுடு என்று திறமையான பேட்டிங் பட்டாளத்துடன் சென்னை அணி அடியெடுத்து வைக்கிறது.

மும்பை அணி 4 வெற்றி, 3 தோல்வி என 8 புள்ளிகளுடன் 4-வது இடத்தில் உள்ளது. அந்த அணியில் பொல்லார்ட், டி காக், ஹர்திக் பாண்ட்யா, கேப்டன் ரோகித் சர்மா, சூர்யகுமார் என்று அனைத்து முன்னணி பேட்ஸ்மேன்களும் இணைந்து விட்டனர். பந்துவீச்சில் ஜஸ்பிரித் பும்ரா, டிரென்ட் பவுல்ட், ராகுல் சாஹர் மிரட்ட காத்திருக்கிறார்கள். அமீரக ஆடுகளங்கள் மெதுவான (ஸ்லோ) தன்மை கொண்டவை என்பதால் சுழற்பந்து வீச்சின் தாக்கமும் முக்கிய பங்கு வகிக்கும்.

மொத்தத்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு பலம் வாய்ந்த அணிகளின் யுத்தத்தோடு ஐ.பி.எல். சரவெடி தொடங்குவதால் ரசிகர்களின் ஆவல் எகிறியுள்ளது. 2019-ம் ஆண்டுக்கு பிறகு முதல் முறையாக கணிசமான ரசிகர்களும் அனுமதிக்கப்படுவதால் களத்தில் உற்சாகம் ஆர்ப்பரிக்கும். அது மட்டுமின்றி இதே இடத்தில் தான் அடுத்த மாதம் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடக்க இருப்பதால் நட்சத்திர வீரர்கள் கூடுதல் உத்வேகத்துடன் வரிந்து கட்டுவார்கள் என்பதில் சந்தேகமில்லை.

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

சென்னை: ருதுராஜ், மொயீன் அலி, சுரேஷ் ரெய்னா, அம்பத்தி ராயுடு, ரவீந்திர ஜடேஜா, வெய்ன் பிராவோ, டோனி (கேப்டன்), ஷர்துல் தாக்குர், தீபக் சாஹர், இம்ரான் தாஹிர், நிகிடி அல்லது ஹேசில்வுட்.

மும்பை: ரோகித் சர்மா (கேப்டன்), குயின்டான் டி காக், சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், பொல்லார்ட், ஹர்திக் பாண்ட்யா, குருணல் பாண்ட்யா, ஆடம் மில்னே அல்லது நாதன் கவுல்டர்-நிலே, ஜெயந்த் யாதவ் அல்லது ராகுல் சாஹர், டிரென்ட் பவுல்ட், பும்ரா.

இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.