கிரிக்கெட்

பெங்களூரு-கொல்கத்தா அணிகள் இன்று மோதல் + "||" + Bangalore-Kolkata clash today

பெங்களூரு-கொல்கத்தா அணிகள் இன்று மோதல்

பெங்களூரு-கொல்கத்தா அணிகள் இன்று மோதல்
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்றைய ஆடடத்தில் பெங்களூரு-கொல்கத்தா அணிகள் மோதுகின்றன.
அபுதாபி,

மீண்டும் தொடங்கியுள்ள ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் அபுதாபியில் இன்று (திங்கட்கிழமை) அரங்கேறும் 31-வது லீக் ஆட்டத்தில் விராட் கோலி தலைமையிலான பெங்களூரு ராயல்சேலஞ்சர்ஸ் அணி, இயான் மோர்கன் தலைமையிலான முன்னாள் சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்சை எதிர்கொள்கிறது.

பெங்களூரு அணி இந்திய மண்ணில் நடந்த முதல் பாதியில் சிறப்பாக விளையாடியது. 7 ஆட்டங்களில் 5 வெற்றி, 2 தோல்வியுடன் 10 புள்ளிகள் பெற்று இருக்கிறது. கேப்டன் விராட் கோலி (7 ஆட்டத்தில் 198 ரன்), டிவில்லியர்ஸ் (207 ரன்), மேக்ஸ்வெல் (223 ரன்), தேவ்தத் படிக்கல்( 195 ரன்) ஆகியோர் அந்த அணியின் பேட்டிங் தூண்களாக உள்ளனர். இவர்கள் நிலைத்து நின்று ஆடுவதை பொறுத்து தான் அணியின் ஸ்கோர் அமையும். இதுவரை ஐ.பி.எல். கோப்பையை வெல்லாததால் விமர்சனங் களை சந்தித்து வரும் கேப்டன் விராட் கோலி சாதிக்கும் முனைப்புடன் உள்ளார். பந்து வீச்சில் வேகப்பந்து வீச்சாளர்கள் முகமது சிராஜ், ஹர்ஷல் பட்டேல், கைல் ஜாமிசன் மற்றும் யுஸ்வேந்திர சாஹல், புதிய வரவான இலங்கை சுழற்பந்து வீச்சாளர் ஹசரங்கா ஆகியோர் நம்பிக்கை அளிக்கிறார்கள்.

கொல்கத்தா அணி முதல் பாதியில் 7 ஆட்டங்களில் ஆடி 2-ல் வெற்றியும், 5-ல் தோல்வியும் கண்டு 4 புள்ளிகளுடன் 7-வது இடம் வகிக்கிறது. பேட்டிங் மற்றும் பந்துவீச்சு ஒருசேர ‘கிளிக்’ ஆகாததால் வெகுவாக தடுமாறியது. நிதிஷ் ராணா (201 ரன்) தவிர மற்றவர்களின் பேட்டிங் குறிப்பிடும்படி இல்லை. சுப்மான் கில், கேப்டன் மோர்கன், ஆந்த்ரே ரஸ்செல், விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் உள்ளிட்டோரும் கைகொடுத்தால் தான் 2-வது பாதியிலாவது எழுச்சி பெற முடியும். ஹர்பஜன்சிங், குல்தீப் யாதவ், சுனில் நரின், வருண் சக்ரவர்த்தி, ஷகிப் அல்-ஹசன் என்று சுழல் ஜாலங்களுக்கு அந்த அணியில் பஞ்சமில்லை. அமீரக ஆடுகளங்கள் ஓரளவு மெதுவான தன்மை கொண்டவை என்பதால் சுழற்பந்து வீச்சாளர்கள் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது.

கொல்கத்தா அணியின் தலைமை ஆலோசகர் டேவிட் ஹஸ்சி கூறுகையில், ‘இது போன்ற நிலைமையை மாற்றி வெற்றிப்பாதைக்கு திரும்பிய அனுபவம் எங்களுக்கு உண்டு. மீண்டும் அதே போல் எங்களால் செய்ய முடியும். அதற்குரிய திறமை இந்த அணியிடம் இருக்கிறது’ என்றார்.

இவ்விரு அணிகளும் ஏற்கனவே சென்னையில் சந்தித்த லீக்கில் பெங்களூரு அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. அதற்கு கொல்கத்தா பதிலடி கொடுக்குமா? என்பதை பார்க்கலாம்.

இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.