தோல்வியால் துவண்டு போய்விடக்கூடாது - பஞ்சாப் பயிற்சியாளர் அணில் கும்பிளே


தோல்வியால் துவண்டு போய்விடக்கூடாது - பஞ்சாப் பயிற்சியாளர் அணில் கும்பிளே
x
தினத்தந்தி 22 Sep 2021 9:09 PM GMT (Updated: 2021-09-23T02:39:33+05:30)

இலக்கை நெருங்கி வந்து தோல்வி காண்பது பஞ்சாப் அணியின் வழக்கமாகி விட்டது என்று அந்த அணியின் பயிற்சியாளர் அனில் கும்பிளே வேதனை தெரிவித்தார்.

துபாய்,

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் துபாயில் நேற்று முன்தினம் இரவு நடந்த பரபரப்பான லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் 2 ரன் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்சை தோற்கடித்தது. போட்டிக்கு பிறகு பஞ்சாப் அணியின் தலைமை பயிற்சியாளர் அனில் கும்பிளே நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், “இலக்கை நெருங்கி வந்து தோல்வி அடைவது எங்களுக்கு கொஞ்சம் வழக்கமாகி விட்டது. குறிப்பாக துபாயில் இந்த மாதிரி நடக்கிறது. 19-வது ஓவரில் ஆட்டத்தை முடிக்க வேண்டும் என்பது தான் எங்களது தெளிவான திட்டமாகும். அது தான் எங்களுடைய அணுகுமுறையாகவும் இருந்தது. 

ஆனால் துரதிருஷ்டவசமாக கடைசி ஓவர் வரை ஆட்டம் சென்றுவிட்டது. கடைசி சில பந்துகளில், அதிர்ஷ்டத்தை பொறுத்தும் எதுவும் நடக்கலாம். கடைசி ஓவரை கார்த்திக் தியாகி வீசிய விதம் பாராட்டுக்குரியதாகும். அவர் சில பந்துகளை ஆப் ஸ்டம்ப்புக்கு வெளியே வைடாக வீசினார். ஆனால் எங்கள் பேட்ஸ்மேன்கள் அதற்கு தகுந்தபடி செயல்படவில்லை. இந்த மாதிரி நெருக்கமாக வந்து தோற்கும் பிரச்சினை குறித்து நாங்கள் ஆலோசித்து தீர்வு காண வேண்டியது அவசியமானதாகும். எங்களுக்கு இன்னும் 5 ஆட்டங்கள் இருக்கிறது. இதனால் இந்த தோல்வியால் துவண்டு போய்விடக்கூடாது” என்றார்.

Next Story