வெற்றியை தொடரும் முனைப்பில் டெல்லி அணி


வெற்றியை தொடரும் முனைப்பில் டெல்லி அணி
x
தினத்தந்தி 24 Sep 2021 11:34 PM GMT (Updated: 24 Sep 2021 11:34 PM GMT)

நடப்பு தொடரில் 7 வெற்றி, 2 தோல்வி என்று 14 புள்ளிகளுடன் ஜரூராக பயணிக்கும் டெல்லி அணி இன்றைய ஆட்டத்தில் வெற்றி கண்டால் ஏறக்குறைய ‘பிளே-ஆப்’ சுற்றை உறுதி செய்து விடும்.

அமீரகத்தில் தொடங்கிய 2-வது சீசனின் முதல் ஆட்டத்தில் 134 ரன்னில் ஐதராபாத்தை சுருட்டி வெற்றி கண்ட டெல்லி அணி அதே உத்வேகத்துடன் வரிந்து கட்டும். தொடக்க ஆட்டக்காரர்கள் ஷிகர் தவான் (422 ரன்), பிரித்வி ஷா (319 ரன்), காயத்தில் இருந்து மீண்டு மறுபிரவேசம் செய்துள்ள முன்னாள் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் உள்ளிட்டோர் பேட்டிங்கில் சூப்பர் பார்மில் உள்ளனர். ஐ.பி.எல்.-ன் அதிவேக பந்து வீச்சாளர் அன்ரிச் நோர்டியா, காஜிசோ ரபடா துல்லியமாக பந்து வீசி மிரட்டக்கூடியவர்கள். காலில் ஏற்பட்ட தசைப்பிடிப்பால் முந்தைய ஆட்டத்தில் பாதியில் விலகிய ஆல்-ரவுண்டர் மார்கஸ் ஸ்டோனிஸ் இன்றைய ஆட்டத்தில் ஆடுவது சந்தேகம் தான். அவருக்கு பதிலாக ஸ்டீவன் சுமித் இடம் பிடிக்க வாய்ப்புள்ளது.

தலா 4 வெற்றி, 4 தோல்வி என 8 புள்ளிகளுடன் உள்ள ராஜஸ்தான் அணி கடந்த ஆட்டத்தில் 2 ரன் வித்தியாசத்தில் பஞ்சாப்பை தோற்கடித்தது. இளம் வேகப்பந்து வீச்சாளர் கார்த்திக் தியாகி கடைசி ஓவரில் ஒரு ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து ஹீரோவாக திகழ்ந்தார். இருப்பினும் பலம் வாய்ந்த டெல்லியை சமாளிக்க வேண்டும் என்றால் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியது முக்கியம். அத்துடன் கேப்டன் சஞ்சு சாம்சன் கூடுதல் பொறுப்புடன் பேட்டிங் செய்ய வேண்டியது அவசியமாகும். இவ்விரு அணிகளும் ஏற்கனவே சந்தித்த லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. அதற்கு டெல்லி அணி பதிலடி கொடுக்கும் வேட்கையுடன் காத்திருப்பதால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது.

Next Story