வெற்றிப்பாதைக்கு திரும்புவது யார்?


வெற்றிப்பாதைக்கு திரும்புவது யார்?
x
தினத்தந்தி 25 Sep 2021 11:21 PM GMT (Updated: 25 Sep 2021 11:21 PM GMT)

விராட் கோலி தலைமையிலான பெங்களூரு அணி 5 வெற்றி, 4 தோல்வியுடன் இதுவரை 10 புள்ளிகள் பெற்றிருக்கிறது.

கொல்கத்தா, சென்னை அணிகளிடம் அடுத்தடுத்து உதைவாங்கியதால் தடுமாறிப்போன பெங்களூரு அணி வெற்றிப்பாதைக்கு திரும்பும் முனைப்புடன் உள்ளது. அதிரடி வீரர்கள் டிவில்லியர்ஸ், மேக்ஸ்வெல் முந்தைய 2 ஆட்டங்களிலும் ஜொலிக்கவில்லை. இதே போல் எதிர்பார்க்கப்பட்ட சுழற்பந்து வீச்சாளர் ஹசரங்காவும் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இவர்கள் பார்முக்கு திரும்பினால், பெங்களூரு வலுவடையும். அமீரக மண்ணில் தொடர்ச்சியாக 7 தோல்விகளை (கடந்த ஆண்டு போட்டியையும் சேர்த்து) சந்தித்துள்ள பெங்களூரு அணி தோல்விப்பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

4 வெற்றி, 5 தோல்விகளுடன் 8 புள்ளி பெற்றுள்ள நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியும் இப்போது நெருக்கடிக்குள்ளாகி இருக்கிறது. கொல்கத்தாவுக்கு எதிரான கடந்த ஆட்டத்தில் முதல் விக்கெட்டுக்கு 78 ரன் எடுத்த போதிலும் மிடில் வரிசை சொதப்பியதால் 160 ரன்னுக்குள் அடங்கி தோல்வியை தழுவியது. பலம் வாய்ந்த அணி என்ற முத்திரை குத்தப்பட்ட மும்பை அணிக்கு ஆட்டம் ஒருங்கிணைந்து ‘கிளிக்’ ஆகாததால் சறுக்கலாகி விடுகிறது. காயத்தால் கடந்த இரு ஆட்டங்களில் ஆடாத ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா நேற்று பயிற்சியில் ஈடுபட்டார். பெங்களூருவுக்கு எதிரான ஆட்டத்திற்கு அவர் உடல்தகுதியுடன் இருப்பார் என்று நம்புவதாக மும்பை அணியின் பந்துவீச்சு ஆலோசகர் ஜாகீர்கான் தெரிவித்துள்ளார்.

மொத்தத்தில் மும்பை அணியும் சரிவில் இருந்து மீள்வதற்கு வரிந்து கட்டும் என்பதால் ரசிகர்களுக்கு நல்ல விருந்து காத்திருக்கிறது. நடப்பு ஐ.பி.எல். தொடரின் முதல் லீக்கில் இவ்விரு அணிகளும் தான் மோதின. திரிலிங்கான அந்த ஆட்டத்தில் பெங்களூரு 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது நினைவு கூரத்தக்கது.

Next Story