இருபது ஓவர் கிரிக்கெட்டில் கோலி புதிய சாதனை;10000 ரன்களை கடந்தார்


இருபது ஓவர் கிரிக்கெட்டில் கோலி புதிய சாதனை;10000 ரன்களை கடந்தார்
x
தினத்தந்தி 27 Sep 2021 8:22 AM GMT (Updated: 27 Sep 2021 8:24 AM GMT)

இருபது ஓவர் கிரிக்கெட்டில் போட்டிகளில் 10000 ரன்களை கடந்த முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றார் விராட் கோலி.

துபாய், 

ஐ.பி.எல். போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இந்த போட்டியில் விராட் கோலி பேட்டிங் செய்தபோது பும்ரா வீசிய பந்தை சிக்சருக்கு விளாசினார். அப்போது அனைத்து வகையான இருபது ஓவர் கிரிக்கெட்டிலும் (சர்வதேச மற்றும்  உள்நாட்டு போட்டிகள்) சேர்த்து மொத்தம் 10,000 ரன்களை கடந்த முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றார். உலக அரங்கில் இச்சாதனையை நிகழ்த்திய 5-வது வீரர் என்ற பெருமையையும் கோலி பெற்றார்.

32 வயதான கோலி நேற்றைய போட்டிக்கு முன் 298 இன்னிங்ஸ்சில் விளையாடியுள்ளார். இதில் 5 சதங்கள் மற்றும் 73 அரைசதங்களின் உதவியுடன் 41.61  ரன்களை சராசரியாக வைத்திருக்கிறார்.

ஒட்டுமொத்த உலக அரங்கில் மேற்கிந்திய தீவுகள் ஜாம்பவான் கிறிஸ் கெய்ல்  டி 20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்துள்ளார். அவர்  14,000 ரன்களுக்கும் மேல் அடித்துள்ளார். கோலி மற்றும் கெய்ல் தவிர,மேற்கு இந்திய தீவுகள் அணி கேப்டன் கீரான் போலார்ட், பாகிஸ்தானின் சோயிப் மாலிக் மற்றும் ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் ஆகியோர் டி 20 கிரிக்கெட்டில் 10,000 ரன்களுக்கு மேல் எடுத்தவர்கள் ஆவர்.

Next Story