‘இனிவரும் ஆட்டங்களில் ஆடமாட்டேன்’ - டேவிட் வார்னர் அறிவிப்பு


‘இனிவரும் ஆட்டங்களில் ஆடமாட்டேன்’ - டேவிட் வார்னர் அறிவிப்பு
x
தினத்தந்தி 29 Sep 2021 12:07 AM GMT (Updated: 29 Sep 2021 12:07 AM GMT)

நடப்பு ஐ.பி.எல். கிரிக்கெட் சீசனில் இனிவரும் ஆட்டங்களில் ஆடமாட்டேன் என டேவிட் வார்னர் அறிவித்துள்ளார்.

துபாய்,

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் துபாயில் நேற்று முன்தினம் இரவு நடந்த லீக் ஆட்டத்தில் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்சை வீழ்த்தி 2-வது வெற்றியை பெற்றது. இதில் ராஜஸ்தான் நிர்ணயித்த 165 ரன் இலக்கை ஐதராபாத் அணி 18.3 ஓவர்களில் எட்டிப்பிடித்தது. ஐதராபாத் தொடக்க ஆட்டக்காரர் ஜாசன் ராய் (60 ரன்கள்) ஆட்டநாயகன் விருது பெற்றார். இந்த ஆண்டின் முதல்பாதியில் மோசமான ‘பார்ம்’ காரணமாக கேப்டன் பதவியை இழந்த ஐதராபாத் அணியின் அதிரடி வீரர் டேவிட் வார்னர் 8 ஆட்டங்களில் ஆடி 195 ரன்களே எடுத்துள்ளார். இதனால் ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் வார்னர் அதிரடியாக நீக்கப்பட்டார். ஸ்டேடியத்துக்கு வராமல் ஓட்டல் அறையில் இருந்தபடி ஆட்டத்தை பார்த்த அவர் வெற்றிக்கு பிறகு இன்ஸ்டாகிராம் மூலம் அணியினருக்கு வாழ்த்து தெரிவித்தார். அத்துடன் ரசிகரின் கேள்விக்கு அளித்த பதிலில் ‘துரதிர்ஷ்டவசமாக மீண்டும் (இந்த சீசனில்) நான் விளையாடமாட்டேன். ஆனால் தயவு செய்து தொடர்ந்து அணிக்கு ஆதரவு அளியுங்கள்’ என்று கேட்டுக் கொண்டார். இதன் மூலம் அடுத்து வரும் லீக் ஆட்டங்களில் 34 வயதான டேவிட் வார்னர் விளையாடமாட்டார் என்பது உறுதியாகி இருக்கிறது. வருங்காலத்தில் ஐதராபாத் அணியில் அவர் தொடருவாரா? என்ற கேள்வியும் எழுந்து இருக்கிறது.

இது குறித்து ஐதராபாத் அணியின் தலைமை பயிற்சியாளர் டிரேவர் பெய்லிசிடம் கேட்ட போது, ‘எங்களால் அடுத்த சுற்றுக்கு (பிளே-ஆப்) தகுதி பெற முடியாது. எனவே இனி இளம் வீரர்களை களம் இறக்குவது மட்டுமின்றி, அவர்கள் மைதானத்தில் அணியினருடன் இருக்கும் அனுபவத்தையும் பெற வேண்டும் என்று நாங்கள் முடிவு செய்து இருக்கிறோம். வார்னர் மட்டுமின்றி கேதர் ஜாதவ், ஷபாஸ் நதீம் போன்ற அனுபவ வீரர்களும் இந்த ஆட்டத்தில் இடம் பெறவில்லை. எங்கள் அணியில் இடம் பெற்றுள்ள பல இளம் வீரர்கள் மாற்று வீரர்களாக கூட மைதானத்துக்கு வந்ததில்லை. அவர்களும் எங்களுடன் வந்து அனுபவத்தை பெற வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று நினைக்கிறோம். இந்த நடைமுறை இன்னும் சில ஆட்டங்களில் கூட தொடரலாம். மற்றவர்களை போல் வார்னரும் ஓட்டலில் அமர்ந்து அணிக்கு ஆதரவு அளித்து வருகிறார். நாங்கள் எல்லோரும் ஒன்றாகவே இருக்கிறோம். வார்னர் தொடர்ந்து அணியில் நீடிப்பாரா? என்பது குறித்து எதுவும் விவாதிக்கப்படவில்லை. பெரிய ஏலத்துக்கு முன்பு இது தான் கடைசி வருடம். அது குறித்த முடிவுகள் இனிமேல் தான் எடுக்கப்படும்’ என்றார். அடுத்த ஆண்டு ஐ.பி.எல். போட்டிக்கு முன்பாக மெகா ஏலம் நடக்க இருப்பதால் வார்னரை ஐதராபாத் அணி கழற்றி விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story