ஐ.பி.எல். கிரிக்கெட்: சென்னை-பஞ்சாப் அணிகள் இன்று மோதல்


ஐ.பி.எல். கிரிக்கெட்: சென்னை-பஞ்சாப் அணிகள் இன்று மோதல்
x
தினத்தந்தி 6 Oct 2021 11:17 PM GMT (Updated: 6 Oct 2021 11:17 PM GMT)

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்றைய ஆட்டங்களில் சென்னை-பஞ்சாப், கொல்கத்தா-ராஜஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

துபாய்,

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வரும் 14-வது ஐ.பி. எல். கிரிக்கெட் போட்டியில் லீக் சுற்று இறுதி கட்டத்தை எட்டிவிட்டது. இன்னும் 4 லீக் ஆட்டங்களே எஞ்சியுள்ளன. டெல்லி, சென்னை, பெங்களூரு ஆகிய 3 அணிகள் அடுத்த சுற்றுக்கு (பிளே-ஆப்) தகுதி பெற்று விட்டன. மீதமுள்ள ஒரு இடத்தை பிடிக்கும் அணி எது என்பது நாளை தெளிவாகி விடும்.

ஐ.பி.எல். திருவிழாவில் இன்று (வியாழக்கிழமை) இரண்டு லீக் ஆட்டங்கள் நடக்கின்றன. இந்திய நேரப்படி மாலை 3.30 மணிக்கு துபாயில் நடக்கும் 53-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பஞ்சாப் கிங்சுடன் மோதுகிறது. ஏற்கனவே பிளே-ஆப் சுற்றை அடைந்துவிட்ட சென்னை அணிக்கு (9 வெற்றி, 4 தோல்வியுடன் 18 புள்ளி) இதுவே கடைசி லீக் போட்டியாகும். புள்ளி பட்டியலில் டாப்-2 இடங்களுக்குள் நீடிக்க வேண்டும் என்றால் இன்றைய ஆட்டத்தில் சென்னை அணி கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும்.

2-வது கட்ட ஐ.பி.எல். சீசனில் முதல் 4 ஆட்டங்களில் தொடர்ச்சியாக வெற்றிகளை குவித்து அசத்திய சென்னை அணி கடந்த இரு ஆட்டங்களில் ராஜஸ்தான் மற்றும் டெல்லியிடம் தோல்வியை தழுவியது. எனவே மீண்டும் உத்வேகம் அடைவதற்கும் இந்த வெற்றி அவசியமாகும். சென்னை அணியில் ருதுராஜ் கெய்க்வாட்டும் (521 ரன்), பாப் டு பிளிஸ்சிஸ்சும் (470 ரன்), பேட்டிங்கில் பெரும்பாலும் திருப்திகரமான தொடக்கத்தை தந்துள்ளனர். அவர்கள் நிலைத்து நின்று ஆடாவிட்டால் மிடில் வரிசையும் தடுமாற்றம் கண்டு விடுகிறது. மிடில் வரிசையில் அம்பத்தி ராயுடுவின் பேட்டிங் மட்டும் சீராக இருக்கிறது. கேப்டன் டோனி, சுரேஷ் ரெய்னா, மொயீன் அலியும் ரன்வேட்டை நடத்தினால் சென்னை அணியின் பேட்டிங் அசுர பலம் அடையும். பந்து வீச்சில் வெய்ன் பிராவோ, தீபக் சாஹர், ஷர்துல் தாக்குர், ஜடேஜா வலு சேர்க்கிறார்கள்.

ராகுலின் துரதிர்ஷ்டம்

பஞ்சாப் கிங்ஸ் அணி, 13 ஆட்டங்களில் ஆடி 5 வெற்றி, 8 தோல்வி என்று 10 புள்ளிகளுடன் ஏறக்குறைய அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்டது. அந்த அணியை பொறுத்தவரை போட்டியை வெற்றியுடன் நிறைவு செய்ய தீவிரம் காட்டுவார்கள். பஞ்சாப் அணியில் கேப்டன் லோகேஷ் ராகுல் ஒவ்வொரு சீசனிலும் ரன்மழை பொழிந்தாலும் ஏனோ அந்த அணி மட்டும் கரைசேர மறுக்கிறது. இந்த ஆண்டில் அவர் 5 அரைசதம் உள்பட 528 ரன்கள் சேர்த்து, அதிக ரன் குவித்தவர் பட்டியலில் முதலிடத்தில் நீடிக்கிறார்.

கடந்த 3 ஐ.பி.எல். தொடரை எடுத்துக் கொண்டால் ஒவ்வொரு முறையும் அவர் 590 ரன்களுக்கு மேல் குவித்த போதிலும் பஞ்சாப் அணி லீக் சுற்றை தாண்டவில்லை. அதற்கு காரணம் மிடில் வரிசை பலவீனம் தான். இந்த முறையும் அந்த பரிதாபம் நீள்கிறது. ஏற்கனவே சந்தித்த தொடக்க லீக்கில் பஞ்சாப் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னையிடம் தோற்றது நினைவு கூரத்தக்கது.

முக்கியமான ஆட்டம்

இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு சார்ஜாவில் நடக்கும் மற்றொரு ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்கள் கொல்கத்தா நைட் ரைடர்சும், ராஜஸ்தான் ராயல்சும் பலப்பரீட்சை நடத்துகின்றன.

6 வெற்றி, 7 தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்றுள்ள கொல்கத்தா அணி இன்றைய ஆட்டத்தில் ஓரளவு வித்தியாசத்தில் வெற்றி பெற்றாலே போதும். அடுத்த சுற்றை எட்டி விடலாம். ஏனெனில் இதே வாய்ப்பில் நீடிக்கும் மும்பை இந்தியன்சை விட கொல்கத்தாவின் ரன்ரேட் திடகாத்திரமாக இருக்கிறது. கொல்கத்தா அணியில் வெங்கடேஷ் அய்யர், திரிபாதி, சுப்மான் கில், நிதிஷ் ராணா ஆகிய இளம் பட்டாளம் பேட்டிங்கில் அமர்க்களப்படுத்துகிறது. கேப்டன் மோர்கனின் பார்ம் தான் கவலைக்குரிய அம்சமாக உள்ளது. பந்து வீச்சில் சுனில் நரின், வருண் சக்ரவர்த்தி, டிம் சவுதி உள்ளிட்டோர் கைகொடுக்கிறார்கள்.

அதே சமயம் 10 புள்ளிகளுடன் உள்ள ராஜஸ்தான் அணியை பொறுத்தவரை இந்த ஆட்டத்தில் இமாலய வெற்றியை ருசிக்க வேண்டும். அதன் பிறகு மும்பை இந்தியன்ஸ் கடைசி லீக்கில் ஐதராபாத்திடம் தோற்க வேண்டும். இவ்வாறு நிகழ்ந்தால் மும்பை, ராஜஸ்தான், கொல்கத்தா மூன்று அணிகளும் தலா 12 புள்ளிகள் வகிக்கும். அப்போது ரன்ரேட் அடிப்படையில் ராஜஸ்தானுக்கு அதிர்ஷ்டம் அடிக்கலாம். ஆனால் அதற்குரிய வாய்ப்பு மிகவும் குறைவு. மேலும் ஆட்டம் நடக்கும் சார்ஜா ஆடுகளம் மந்தமானது. அவ்வளவு எளிதில் ஷாட்டுகள் அடிக்க முடியாது. பந்து அதிகமாக எழும்பாது. இதே மைதானத்தில் நடந்த மும்பைக்கு எதிரான முந்தைய ஆட்டத்தில் ராஜஸ்தான் வெறும் 90 ரன்னில் முடங்கி மோசமாக தோற்றது. கேப்டன் சஞ்சு சாம்சன், ஜெய்ஸ்வால், இவின் லீவிஸ் ஆகியோரைத் தான் அந்த அணி பேட்டிங்கில் மலை போல் நம்பி இருக்கிறது. இவர்கள் ஜொலித்தால் கொல்கத்தாவுக்கு சவால் அளிக்கலாம்.
ஒரு ‘பிளே-ஆப்’ சுற்று இடம் யாருக்கு?

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் மீதமுள்ள ஒரு ‘பிளே-ஆப்’ சுற்று இடத்தை தட்டிப்பறிக்க 4 அணிகள் வரிந்து கட்டினாலும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் இடையே தான் நேரடி போட்டி நிலவுகிறது,

* 12 புள்ளிகளுடன் உள்ள கொல்கத்தா அணி ரன்ரேட்டிலும் (+0.294) ஆரோக்கியமான நிலையில் இருப்பதால் இன்றைய ஆட்டத்தில் ராஜஸ்தானை சில ஓவர்கள் மீதம் வைத்தோ அல்லது கணிசமான ரன் வித்தியாசத்திலோ தோற்கடித்தால் போதும். அதன் பிறகு மும்பை இந்தியன்ஸ் (12 புள்ளி) தனது கடைசி லீக்கில் ஐதராபாத் சன்ரைசர்சை தோற்கடித்தாலும் பிரச்சினை இல்லை. ரன்ரேட்டில் கொல்கத்தாவின் கையே ஓங்கி நிற்கும். ராஜஸ்தானை கொல்கத்தா அணி ஒரு ரன் வித்தியாசத்தில் வீழ்த்தினாலும் கூட மும்பை அணி அவர்களின் ரன்ரேட்டை முந்துவதற்கு ஐதராபாத்தை ஏறக்குறைய 87 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தாக வேண்டும். ஒரு வேளை கொல்கத்தா அணி ராஜஸ்தானிடம் தோற்று, மும்பை அணி ஐதராபாத்திடம் சரிந்தால் 3 அணிகளும் ஒரே மாதிரி 12 புள்ளிகளுடன் இருக்கும். அப்போதும் ரன்ரேட் அடிப்படையில் கொல்கத்தாவுக்கே வாய்ப்பு அதிகமாகும்.

* ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா அணி தோற்க வேண்டும் என்பதே இப்போது மும்பை இந்தியன்ஸ் ரசிகர்களின் பிரார்த்தனையாக இருக்கும். அவ்வாறு நிகழ்ந்தால் மும்பை அணி கடைசி லீக்கில் ஐதராபாத்தை வீழ்த்தும் பட்சத்தில் சிக்கலின்றி 4-வது அணியாக ‘பிளே-ஆப்’ சுற்றுக்குள் கால்பதிக்கலாம்.

* ராஜஸ்தான் அணிக்கு நூலிழை வாய்ப்பு என்னவென்றால் அந்த அணி ரன்ரேட்டில் கொல்கத்தாவை தாண்டுவதற்கு கிட்டத்தட்ட 125 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்த வேண்டும். அதன் பிறகு மும்பை அணி தனது கடைசி லீக்கில் ஏறக்குறைய 40 ரன்கள் வித்தியாசத்தில் ஐதராபாத்திடம் சரண் அடைய வேண்டும். அப்போது தான் ராஜஸ்தானால் ரன்ரேட்டில் ஏற்றம் கண்டு 4-வது இடத்தை பிடிக்க முடியும். 2-வது பேட்டிங் செய்தால் மிக குறைந்த ஓவர்களில் இலக்கை எட்ட வேண்டியிருக்கும்.

* பஞ்சாப் கிங்ஸ் அணிக்கும் லேசாக வாய்ப்பு ஒட்டிக் கொண்டிருக்கிறது என்று சொல்லலாம். அந்த அணி தனது இறுதி லீக்கில் இன்று சென்னை சூப்பர் கிங்சை பதம் பார்க்க வேண்டும். அதன் பிறகு கொல்கத்தா அணி ராஜஸ்தானிடம் படுதோல்வி அடைய வேண்டும். மும்பை அணி, ஐதராபாத்திடம் அடங்க வேண்டும். இவ்வாறு நிகழ்ந்தால் பஞ்சாப், கொல்கத்தா, மும்பை, ராஜஸ்தான் ஆகிய 4 அணிகளும் தலா 12 புள்ளிகளுடன் சமநிலையில் இருப்பார்கள். அப்போது ரன்ரேட்டில் முன்னிலையில் இருக்கும் அணிக்கு ‘பிளே-ஆப்’ கதவு திறக்கும். அந்த வகையில் கணக்கிட்டால் உதாரணமாக, பஞ்சாப் அணி 70 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்சை வீழ்த்துகிறது என்றால், கிட்டத்தட்ட அதே வித்தியாசத்தில் கொல்கத்தா அணி, ராஜஸ்தானிடம் அடிபணிய வேண்டும். அப்போது தான் பஞ்சாப் அணி ரன்ரேட்டில் கொல்கத்தாவை பின்னுக்கு தள்ளும் வாய்ப்பு உருவாகும்.

Next Story