‘பேட்டிங் செய்கையில் அதிகம் சிந்திக்கக்கூடாது’ சென்னை அணி கேப்டன் டோனி கருத்து


‘பேட்டிங் செய்கையில் அதிகம் சிந்திக்கக்கூடாது’ சென்னை அணி கேப்டன் டோனி கருத்து
x
தினத்தந்தி 11 Oct 2021 10:17 PM GMT (Updated: 11 Oct 2021 10:17 PM GMT)

பேட்டிங் செய்கையில் அதிகம் சிந்திக்கக்கூடாது என்று சென்னை அணியின் கேப்டன் டோனி தெரிவித்தார்.

துபாய்,

14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் துபாயில் நேற்று முன்தினம் இரவு நடந்த இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் 3 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் 4 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்சை வீழ்த்தி ‘திரில்’ வெற்றியை ருசித்து 9-வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இதில் கேப்டன் டோனி 6 பந்துகளில் 3 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 18 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்து அணிக்கு தித்திப்பான வெற்றியை தேடிக்கொடுத்தார். 70 ரன்கள் (50 பந்து, 5 பவுண்டரி, 2 சிக்சர்) குவித்த சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர் ருதுராஜ் கெய்க்வாட் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

டோனி பேட்டி

வெற்றிக்கு பிறகு சென்னை அணியின் கேப்டன் டோனி அளித்த பேட்டியில் கூறியதாவது:-

நான் இந்த போட்டி தொடரில் சிறப்பாக பேட்டிங் செய்யவில்லை. எனவே இந்த போட்டியில் பந்து வருவதை பார்த்தேன். அடித்து ஆடினேன். பவுலர் பந்தை எந்த மாதிரி வீசுகிறார் என்பதை மட்டும் கவனித்தேன். மற்றபடி எது குறித்தும் சிந்திக்கவில்லை. பேட்டிங் செய்யும் போது அதிகம் சிந்திக்கக்கூடாது. அப்படி செய்தால் உங்களது திட்டத்தில் குழப்பம் ஏற்படக்கூடும். என்னுடைய இன்னிங்ஸ் முக்கியமான ஒன்றாகும். டெல்லி அணியின் பந்து வீச்சு பலமானதாகும். அவர்கள் சூழ்நிலையை புரிந்து கொண்டு அதற்கு தகுந்தபடி சிறப்பாக செயல்பட்டார்கள்.

ருதுராஜூடன் எனது ஆலோசனை எப்பொழுதும் அதிகம் இருக்காது. முதலில் அவர் என்ன நினைக்கிறார் என்பதை அறிந்து கொள்வேன். அவர் ஆட்டத்தில் சிறப்பான முன்னேற்றம் கண்டு இருக்கிறார். 20 ஓவர்களும் நிலைத்து நின்று விளையாட விரும்புகிற பேட்ஸ்மேன்களில் அவரும் ஒருவர். தீபக் சாஹர் போல் ஷர்துல் தாக்குரும் நன்கு பேட்டிங் செய்யும் ஆற்றல் படைத்தவர். மற்ற தொடக்க வரிசை பேட்ஸ்மேன்களை போல் அல்லாமல் அவர் முதல் பந்தில் இருந்தே அடித்து விளையாட முடியும். அப்படி அவர் செய்யும் போது ஆட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்தலாம். அதன் மூலம் பந்துக்கும், வெற்றிக்கு தேவையான ரன்னுக்கும் இடையிலான வித்தியாசத்தை குறைக்க முடியும். இதனால் தான் ஷர்துல் தாக்குர் 4-வது வரிசையில் களம் இறக்கப்பட்டார். ராபின் உத்தப்பா தொடக்க வரிசையில் பேட்டிங் செய்வதை விரும்பக்கூடியவர். மொயீன் அலி 3-வது வரிசையில் நன்றாக விளையாடி வருகிறார். ஆட்டத்தின் சூழ்நிலை மற்றும் எதிரணி எது? ஆகியவற்றை கருத்தில் கொண்டு அவர்கள் இருவரில் யாரை 3-வது வரிசையில் களம் இறக்குவது என்பதை முடிவு செய்கிறோம்.

கடந்த ஆண்டு நாங்கள் முதல்முறையாக ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு தகுதி பெறாமல் போனோம். ஆனால் அந்த வாய்ப்பை இழந்த பிறகு மீதம் இருந்த 3-4 ஆட்டங்களை சரியாக பயன்படுத்தி கொள்ள விரும்பினோம். அதனை எங்களது பேட்ஸ்மேன்கள் நன்றாக பயன்படுத்தி கொண்டனர். அதனால் தான் இந்த சீசனுக்கு எங்களால் வலுவாக திரும்பி வர முடிந்தது.

இவ்வாறு டோனி கூறினார்.

Next Story