20 ஓவர் உலக கோப்பை இந்திய அணியில் ஷர்துல் தாக்குர் சேர்ப்பு


20 ஓவர் உலக கோப்பை இந்திய அணியில் ஷர்துல் தாக்குர் சேர்ப்பு
x
தினத்தந்தி 13 Oct 2021 11:09 PM GMT (Updated: 13 Oct 2021 11:09 PM GMT)

20 ஓவர் உலக கோப்பை இந்திய அணியில் அக்‌ஷர் பட்டேல் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ஷர்துல் தாக்குர் சேர்க்கப்பட்டுள்ளார்.

புதுடெல்லி,

16 அணிகள் பங்கேற்கும் 7-வது 20 ஓவர் உலககோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற 17-ந்தேதி முதல் அடுத்த மாதம் 14-ந்தேதி வரை ஓமன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கிறது. இதில் சூப்பர்-12 சுற்றில் நேரடியாக பங்கேற்கும் இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது. ஆனால் ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா பந்து வீசுவதற்கு இன்னும் தகுதியுடன் இல்லாத நிலையில் ஒரு வேகப்பந்து வீச்சாளர் பற்றாக்குறை இருப்பதாக முன்னாள் வீரர்கள் பலரும் குறை கூறினர்.

இந்த நிலையில் இதை கருத்தில் கொண்டு 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியில் சுழற்பந்து வீச்சாளர் அக்‌ஷர் பட்டேல் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ஆல்-ரவுண்டரான வேகப்பந்து வீசக்கூடிய ஷர்துல் தாக்குர் சேர்க்கப்பட்டு இருப்பதாக இந்திய கிரிக்கெட் வாரியம் நேற்று அறிவித்தது. ஸ்ரேயாஸ் அய்யர், தீபக் சாஹர் ஆகியோருடன் அக்‌ஷர் பட்டேலும் மாற்று வீரர்கள் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். ஒரு வேளை சுழற்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜா காயமடைந்தால், அக்‌ஷர் பட்டேல் மீண்டும் பிரதான அணிக்குள் நுழைவார்.

29 வயதான மராட்டியத்தை சேர்ந்த ஷர்துல் தாக்குர் 4 டெஸ்ட், 15 ஒரு நாள் மற்றும் 22 இருபது ஓவர் போட்டிகளில் விளையாடி இருக்கிறார். நடப்பு ஐ.பி.எல். தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 18 விக்கெட்டுகள் வீழ்த்தி கவனத்தை ஈர்த்துள்ளார்.

மேலும் இந்திய அணியை தயார்படுத்துவதற்கு உதவிடும் வகையில் வலை பயிற்சி பவுலர்களாக உம்ரான் மாலிக், அவேஷ் கான், ஹர்ஷல் பட்டேல், லுக்மன் மெரிவாலா, வெங்கடேஷ் அய்யர், கரண் ஷர்மா, ஷபாஸ் அகமது, கிருஷ்ணப்பா கவுதம் ஆகியோரை தொடர்ந்து அமீரகத்திலேயே இருக்கும்படி இந்திய கிரிக்கெட் வாரியம் உத்தரவிட்டுள்ளது.

இந்திய அணி வருமாறு:- விராட் கோலி (கேப்டன்), ரோகித் சர்மா (துணை கேப்டன்), லோகேஷ் ராகுல், சூர்யகுமார் யாதவ், ரிஷாப் பண்ட், இஷான் கிஷன், ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, ராகுல் சாஹர், அஸ்வின், ஷர்துல் தாக்குர், வருண் சக்ரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா, புவனேஷ்வர்குமார், முகமது ஷமி.

Next Story