கிரிக்கெட்

“கேப்டன் டோனி இல்லாமல் வெற்றி கொண்டாட்டம் இல்லை” - சென்னை அணி தலைமை செயல் அதிகாரி + "||" + No victory celebration without Captain Dhoni Chennai Team CEO says

“கேப்டன் டோனி இல்லாமல் வெற்றி கொண்டாட்டம் இல்லை” - சென்னை அணி தலைமை செயல் அதிகாரி

“கேப்டன் டோனி இல்லாமல் வெற்றி கொண்டாட்டம் இல்லை” - சென்னை அணி தலைமை செயல் அதிகாரி
கேப்டன் டோனி தற்போது 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கான ஆலோசகராக இந்திய அணியுடன் இணைந்துள்ளார்.
துபாய்,

14-வது ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் இரவு துபாயில் நடந்த பரபரப்பான இறுதி ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்சை தோற்கடித்து 4-வது முறையாக சாம்பியன் கோப்பையை கைப்பற்றி அசத்தியது. வாகை சூடிய சென்னை அணிக்கு ரூ.20 கோடியும், 2-வது இடத்தை பிடித்த கொல்கத்தா அணிக்கு ரூ.12½ கோடியும் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது. 

டுபிளிசிஸ் ஆட்டநாயகன் விருதையும், இந்த தொடரில் அதிக விக்கெட் வீழ்த்தியவரான பெங்களூரு வீரர் ஹர்ஷல் பட்டேல் (32 விக்கெட்) தொடர்நாயகன் விருதையும் பெற்றனர். இதே போல் மொத்தம் 635 ரன்கள் சேர்த்து ரன்குவிப்பில் முதலிடம் பிடித்த சென்னை வீரர் ருதுராஜ் கெய்க்வாட் ஆரஞ்சு நிற தொப்பியை வசப்படுத்தியதுடன் ரூ.10 லட்சம் பரிசையும் பெற்றார்.

பரிசளிப்பு நிகழ்ச்சியின் போது 40 வயதான டோனியிடம் அடுத்த ஆண்டு ஐ.பி.எல். போட்டியிலும் தொடர்ந்து விளையாடுவீர்களா என்று கேட்கப்பட்டது. அதற்கு டோனி, ‘அடுத்த ஆண்டு ஐ.பி.எல். போட்டியில் நான் விளையாடுவது என்பது இந்திய கிரிக்கெட் வாரியத்தின் முடிவில் தான் இருக்கிறது. இரண்டு புதிய ஐ.பி.எல். அணிகள் வருகிறது. மெகா ஏலம் நடக்கிறது. வீரர்கள் தக்கவைப்பு விதிமுறை எப்படி இருக்கும் என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை. எனவே சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எது சிறந்ததாக இருக்குமோ அந்த முடிவை எடுப்போம். 

தக்கவைக்கப்படும் 3-4 வீரர்களில் ஒருவராக நான் இருப்பது என்பது முக்கியமல்ல. அதை காட்டிலும் எந்த வகையிலும் அணி நிர்வாகம் பாதிக்கப்படக்கூடாது. 2008-ம் ஆண்டில் உருவான அணி 10 ஆண்டுக்கும் மேலாக அருமையாக ஆடியது. அதே போன்று அடுத்த 10 ஆண்டுகள் அணிக்கு சிறப்பாக பங்களிப்பு அளிக்கக்கூடிய வீரர்கள் யார் என்பதை அடையாளம் கண்டு வலிமையான அணியை உருவாக்க வேண்டியது அவசியம். அதற்காக கடினமாக உழைக்க வேண்டும்’ என்றார்.

சென்னை அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் கூறுகையில், ‘சென்னை அணியின் கேப்டன் டோனி இல்லாமல் வெற்றி கொண்டாட்டம் கிடையாது. தற்போது டோனி 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கான ஆலோசகராக இந்திய அணியுடன் இணைந்து விட்டார். எனவே உலக கோப்பை முடிந்து டோனி இந்தியா திரும்பிய பிறகு சிறிய அளவிலான கொண்டாட்டத்துக்கு ஏற்பாடு செய்வோம். அவரது வருகைக்காக மகிழ்ச்சியுடன் காத்திருப்போம்’ என்றார்.