பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க இந்திய கிரிக்கெட் வாரியம் அழைப்பு


பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க இந்திய கிரிக்கெட் வாரியம் அழைப்பு
x
தினத்தந்தி 17 Oct 2021 9:02 PM GMT (Updated: 17 Oct 2021 9:02 PM GMT)

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க இந்திய கிரிக்கெட் வாரியம் அழைப்பு விடுத்துள்ளது.

புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரியின் பதவி காலம் 20 ஓவர் உலக கோப்பை போட்டியுடன் முடிவடைகிறது. இதையடுத்து புதிய பயிற்சியாளர் பதவிக்கு முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட்டை நியமிக்க இந்திய கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளது. அவருடன் பேசி அவரையும் சம்மதிக்க வைத்து விட்டனர். 

இருப்பினும் பயிற்சியாளர்களை நியமிப்பதில் வெளிப்படை தன்மை இருக்க வேண்டும், முறைப்படி அறிவிப்பு வெளியிட வேண்டும் என்பது லோதா கமிட்டியின் முக்கியமான பரிந்துரையாகும். இந்த நிலையில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர், பேட்டிங், பவுலிங் மற்றும் பீல்டிங் பயிற்சியாளர்கள் பதவிக்கு தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் நேற்று அறிவிப்பு வெளியிட்டது. இதற்கு வருகிற 26-ந்தேதிக்குள் விண்ணப்பம் அனுப்ப வேண்டும். 

தலைமை பயிற்சியாளர் பதவிக்கு தகுதியாக 30 டெஸ்ட் அல்லது 50 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி இருக்க வேண்டும். அத்துடன் ஏதாவது ஒரு தேசிய அணிக்கு 2 ஆண்டுகள் அல்லது ஐ.பி.எல். அணிக்கு 3 ஆண்டுகள் பயிற்சியாளராக இருந்திருக்க வேண்டும் என்று கிரிக்கெட் வாரியம் கூறியுள்ளது. ராகுல் டிராவிட் விண்ணப்பம் அனுப்பியதும் கிரிக்கெட் ஆலோசனை கமிட்டி முறைப்படி அவரது பெயரை பயிற்சியாளர் பதவிக்கு பரிந்துரை செய்யும்.

Next Story