நான்கு பந்துகளில் நான்கு விக்கெட்டுகள்! அயர்லாந்து வீரர் புதிய சாதனை


நான்கு பந்துகளில் நான்கு விக்கெட்டுகள்! அயர்லாந்து வீரர் புதிய சாதனை
x
தினத்தந்தி 18 Oct 2021 1:05 PM GMT (Updated: 18 Oct 2021 1:05 PM GMT)

இன்று நடைபெற்ற நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் அயர்லாந்து பந்துவீச்சாளர் நான்கு பந்துகளில் நான்கு விக்கெட்டுகள் எடுத்து புதிய சாதனை படைத்தார்.

அபுதாபி,

டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட்டின் லீக் போட்டிகள் நேற்று முதல் நடைபெற்று வருகிறது. இதில் இன்றைய ஆட்டத்தில் நெதர்லாந்து- அயர்லாந்து அணிகள் விளையாடி வருகிறது.

இந்த போட்டியில் அயர்லாந்து பந்துவீச்சாளர் 22 வயதான கர்டிஸ் கேம்பர் நான்கு பந்துகளில் நான்கு விக்கெட்டுகள் எடுத்து புதிய சாதனை படைத்தார். வலது கை வேகப்பந்து வீச்சாளரான கர்டிஸ் கேம்பர், ஆட்டத்தின் 10-வது ஓவரை வீசினார், அதில் கொலின் ஆக்கர்மேன் (11), ரியான் டென் டோஷேட் (0), ஸ்காட் எட்வர்ட்ஸ் (0) மற்றும் ரோலோஃப் வான் டெர் மெர்வே (0) ஆகியோரை அடுத்தடுத்த பந்துகளில் வீழ்த்தி அசத்தினார்.

இந்த சாதனையின் மூலம் ஒரே ஓவரில் தொடர்ந்து நான்கு விக்கெட்டுகள் எடுத்தவர்களின் பட்டியலில் லசித் மலிங்கா மற்றும் ரஷித் கானுடன் தற்போது கர்டிஸ் கேம்பரும்  இணைந்துள்ளார்.

இந்த சாதனையை மலிங்கா இரண்டு முறை நிகழ்த்தியுள்ளார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2007 டி 20 உலகக் கோப்பையின் போது 4 பந்துகளில் 4 விக்கெட்டுகளை எடுத்த அவர் 2019-ஆம் ஆண்டில் பல்லேகலேயில் நியூசிலாந்துக்கு எதிரான டி 20 யில் இந்த சாதனையை மீண்டும் செய்தார்.

ஆப்கானிஸ்தானின் முன்னாள் கேப்டன் ரஷித் கானும் 2019-ல் டேராடூனில் அயர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் நான்கு பந்துகளில் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.


Next Story