டி20 உலகக்கோப்பை பயிற்சி ஆட்டம்: நியூசிலாந்தை வீழ்த்தி ஆஸ்திரேலியா வெற்றி


டி20 உலகக்கோப்பை பயிற்சி ஆட்டம்: நியூசிலாந்தை வீழ்த்தி ஆஸ்திரேலியா வெற்றி
x
தினத்தந்தி 18 Oct 2021 7:29 PM GMT (Updated: 18 Oct 2021 7:29 PM GMT)

டி20 உலகக்கோப்பை பயிற்சி ஆட்டத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.

அபு தாபி,

20 ஓவர் உலகக்கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் நியூசிலாந்து-ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் அதிகபட்சமாக 37 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலியா அணி தரப்பில் அந்த அணியின் கேன் ரிச்சர்ட்சன் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

பின்னர் 159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா அணியின் தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர் மற்றும் ஆரோன் பின்ச் ஆகியோர் களமிறங்கினர். வார்னர் முதல் பந்திலேயே ரன் எதுவும் எடுக்காமல் (0) கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து வந்த மார்ஷ், பின்ச் உடன் ஜோடி சேர்ந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மார்ஷ் மற்றும் பின்ச் தலா 24 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினர்.  

இறுதியில், ஆஸ்திரேலியா அணி 19.5 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் பயிற்சி ஆட்டத்தில் நியூசிலாந்து அணியை 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி திரில் வெற்றி பெற்றது.

ஆஸ்திரேலியா தரப்பில் அந்த அணியின் ஸ்டீவ் ஸ்மித் அதிகபட்சமாக 35 ரன்கள் குவித்தார். நியூசிலாந்து அணி தரப்பில் அதிகபட்சமாக சாண்ட்னெர் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 


Next Story