ரேசி வான் டெர் டஸன் அதிரடி சதம் - பாகிஸ்தானை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா ‘திரில்’ வெற்றி


ரேசி வான் டெர் டஸன் அதிரடி சதம் - பாகிஸ்தானை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா ‘திரில்’ வெற்றி
x
தினத்தந்தி 20 Oct 2021 7:00 PM GMT (Updated: 20 Oct 2021 7:00 PM GMT)

டி20 உலகக்கோப்பை பயிற்சி ஆட்டத்தில் பாகிஸ்தானை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்றது.

அபு தாபி,

டி20 உலகக்கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகின்றது. இதில், நேற்று நடைபெற்ற பயிற்சி போட்டியில் பாகிஸ்தான்-தென் ஆப்பிரிக்கா அணிகள் பலப்பரிட்சை நடத்தின.

இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது. பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்கள் ரிஸ்வான் 19 ரன்களும், கேப்டன் பாபர் அசாம் 15 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.அடுத்து களமிறங்கிய பஃகர் சமான் 28 பந்துகளில் 5 சிக்சர்கள் 2 பவுண்டரிகளுடன் 52 ரன்கள் குவித்து ரிட்டையர்டு ஹர்ட் முறையில் வெளியேறினார்.

பின்னர் வந்த வீரர்கள் ஓரளவு ரன்கள் சேர்க்க, இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 186 ரன்கள் குவித்தது. தென் ஆப்பிரிக்க அணியில் சிறப்பாக பந்து வீசிய ரபாடா அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதனை தொடர்ந்து, 187 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்க அணியின் தொடக்க வீரர்களாக டி காக் மற்றும் ஹென்ட்ரிக்ஸ் களமிறங்கினர். டி காக் 6 ரன்களிலும், ஹென்ட்ரிக்ஸ் 7 ரன்களிலும் அவுட் ஆகினர். அடுத்து வந்த வான் டெர் டஸன் மற்றும் கேப்டன் பவுமா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். கேப்டன் பவுமா 46 ரன்கள் எடுத்திருந்த போது அவுட் ஆனார். ஆனால், அதிரடியாக ஆடிய வான் டெர் டஸன் சதம் விளாசினார். இறுதியில் தென் ஆப்பிரிக்க அணி 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 190 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் பாகிஸ்தான் அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா திரில் வெற்றி பெற்றது. 51 பந்துகளில் 4 சிக்சர்கள் 10 பவுண்டரிகளுடன் 101 ரன்கள் குவித்து வான் டெர் டஸன் இறுதி வரை ஆட்டமிழக்காமல் தென் ஆப்பிரிக்க அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார். பாகிஸ்தான் அணி தரப்பில் இமாத் வாசிம் மற்றும் சஹீன் அப்ரிடி தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.



Next Story