இந்திய அணியில் 6-வது பந்து வீச்சாளர் அவசியம் ரோகித் சர்மா கருத்து


இந்திய அணியில் 6-வது பந்து வீச்சாளர் அவசியம் ரோகித் சர்மா கருத்து
x
தினத்தந்தி 21 Oct 2021 12:05 AM GMT (Updated: 21 Oct 2021 12:05 AM GMT)

ஹர்திக் பாண்ட்யா தயாராகி விடுவார்: இந்திய அணியில் 6-வது பந்து வீச்சாளர் அவசியம் ரோகித் சர்மா கருத்து.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பயிற்சி கிரிக்கெட்டில் இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்ட ரோகித் சர்மா கூறுகையில், ‘ஆல்-ரவுண்டரான ஹர்திக் பாண்ட்யா நல்ல நிலையில் வந்திருக்கிறார். ஆனால் அவர் பவுலிங் செய்வதற்கு இன்னும் சில நாட்கள் பிடிக்கும் என்று நினைக்கிறேன். ஏனெனில் வலை பயிற்சியில் அவர் பெரிய அளவில் பந்து வீசவில்லை. 20 ஓவர் உலக கோப்பை போன்ற பெரிய போட்டிகளில் விளையாடும் போது 100 சதவீதம் உடல்தகுதியுடன் இருக்க வேண்டியது அவசியமாகும். சில தினங்களில் அவர் பந்துவீச்சை தொடங்கி விடுவார் என்று நம்புகிறேன். இந்திய அணிக்குரிய உலக கோப்பை சூப்பர்-12 சுற்று தொடங்கும் போது, எந்த நேரத்திலும் பந்து வீசுவதற்கு அவர் தயாராக இருக்க வேண்டும். எங்களிடம் உள்ள பிரதான பந்து வீச்சாளர்கள் திறமை மிக்கவர்கள். ஆனாலும் அணியில் 6-வதாக ஒரு பந்து வீச்சாளர் இருப்பது அவசியமாகும். பகுதி நேரமாக 6-வதாக பந்து வீசும் வாய்ப்புக்குரிய வீரர் இருப்பதை உறுதி செய்ய விரும்புகிறோம். இதனால் இந்திய அணியின் சரியான கலவை பாதிக்கப்பட்டு விடுமோ என்று கவலைப்படவில்லை. 5 பவுலர்களுடன் இறங்கினாலும் கூட, எங்களது பந்து வீச்சு தரமானது தான். ஆனால் ஏதாவது ஒரு பந்து வீச்சு அடிபடும் போது நெருக்கடியை குறைக்க பகுதி நேர பவுலர் தேவையாகும், ’ என்றார்.

ரோகித் சர்மா, விராட் கோலி, சூர்யகுமார் யாதவ் ஆகியோரை பகுதி நேர பவுலராக பயன்படுத்த இந்திய அணி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

இதன் ஒரு பகுதியாக நேற்றைய பயிற்சி ஆட்டத்தில் விராட் கோலி 2 ஓவர்கள் மிதமான வேகத்தில் பந்து வீசினார். 12 ரன்கள் விட்டுக்கொடுத்த அவர் விக்கெட் ஏதும் வீழ்த்தவில்லை. 6-வது பந்து வீச்சாளர் இடத்தை விராட் கோலி நிரப்புவாரா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Next Story