இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளராக டிராவிட் நியமிக்கப்படுவாரா? கங்குலி பதில்


இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளராக டிராவிட் நியமிக்கப்படுவாரா? கங்குலி பதில்
x
தினத்தந்தி 23 Oct 2021 10:39 PM GMT (Updated: 23 Oct 2021 10:39 PM GMT)

தேசிய கிரிக்கெட் அகாடமியின் வருங்கால திட்டங்கள் குறித்து ஆலோசிப்பதற்காகவே ராகுல் டிராவிட் துபாய் வந்து எங்களை சந்தித்தார். இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவி குறித்து முன்பு பேசுகையில் அவர் ஆர்வம் காட்டியதில்லை என கங்குலி கூறினார்.

இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலி அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-

நடப்பு உலக கோப்பை போட்டிக்கு பிறகு 20 ஓவர் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக விராட்கோலி அறிவித்ததில் எனக்கு ஆச்சரியம் எதுவுமில்லை. இங்கிலாந்து தொடருக்கு பிறகு அவர் இந்த முடிவை எடுத்து இருக்கக்கூடும். இது அவராக எடுத்த முடிவாகும். இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் விராட்கோலிக்கு எந்தவிதமாக நெருக்கடியும் கொடுக்கப்படவில்லை. தற்போது அதிக அளவில் போட்டிகள் நடைபெறுகிறது. எல்லா வடிவிலான போட்டிகளுக்கும் ஒரு வீரர் நீண்டநாட்களாக கேப்டனாக இருப்பது என்பது கடினமான விஷயமாகும். தேசிய அணியை வழிநடத்துவதை வெளியில் இருந்து பார்க்க நன்றாக இருக்கும். நிறைய புகழ், மரியாதை கிடைக்கும். ஆனால் உள்ளூர பார்த்தால் கேப்டனுக்கு ஏராளமான மனஅழுத்தம் மற்றும் உடல் ரீதியான பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியது இருக்கும். உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணியின் ஆலோசகராக டோனியை நியமித்ததில் எந்த தவறுமில்லை. மூன்று ஐ.சி.சி. கோப்பைகளை வென்று கொடுத்து இருக்கும் அவரை ஆலோசகராக சேர்த்து இருப்பது அணிக்கு பலனளிக்கும் என்று நம்புகிறோம். டோனி அமைதியானவர், முதிர்ச்சியானவர். அவரது எல்லை என்ன? என்பது தெளிவாக அறிந்தவர். எனவே அவருக்கும் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரிக்கும் இடையே உரசல் எதுவும் ஏற்படாது.

தேசிய கிரிக்கெட் அகாடமியின் வருங்கால திட்டங்கள் குறித்து ஆலோசிப்பதற்காகவே ராகுல் டிராவிட் துபாய் வந்து எங்களை சந்தித்தார். இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவி குறித்து முன்பு பேசுகையில் அவர் ஆர்வம் காட்டியதில்லை. தேசிய கிரிக்கெட் அகாடமியின் இயக்குனராக நீடிக்கவே விரும்பினார். எனவே அவர் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்கிறாரா? என்பதை பார்க்கலாம்.

இவ்வாறு கங்குலி கூறினார்.



Next Story