கிரிக்கெட்

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்: இந்தியா-பாகிஸ்தான் இன்று பலப்பரீட்சை + "||" + T20 World Cup 2021, India vs Pakistan: Five Player Battles To Watch Out For

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்: இந்தியா-பாகிஸ்தான் இன்று பலப்பரீட்சை

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்: இந்தியா-பாகிஸ்தான் இன்று பலப்பரீட்சை
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.
உலக கோப்பை

7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய நகரங்களில் நடந்து வருகிறது. இதில் சூப்பர்-12 சுற்றில் பங்கேற்றுள்ள 12 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. இதன்படி குரூப்-1ல் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், இலங்கை, வங்காளதேசம், குரூப்-2ல் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், ஸ்காட்லாந்து, நமிபியா ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும்.

இந்த நிலையில் சூப்பர்-12 சுற்றில் இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பாகிஸ்தானை துபாயில் எதிர்கொள்கிறது. இந்த உலக கோப்பை திருவிழாவில் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்நோக்கும் போட்டி இதுவாகும். பரம எதிரிகளான இந்தியா, பாகிஸ்தான் மோதல் என்றாலே வீரர்கள் மட்டுமின்றி ரசிகர்களும் உணர்ச்சி பிழம்பாகி விடுவார்கள். அதுவும் இது உலக கோப்பை என்பதால் அனல் பறக்கும்.

இந்திய அணி

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி பேட்டிங் மற்றும் பந்து வீச்சு இரண்டிலும் வலுவான நிலையில் உள்ளது. கேப்டன் கோலி, துணை கேப்டன் ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல், ரிஷாப் பண்ட், ஹர்திக் பாண்ட்யா என்று அதிரடி சூரர்களும், பும்ரா, முகமது ஷமி, புவனேஷ்வர்குமார், ஜடேஜா, அஸ்வின், வருண் சக்ரவர்த்தி என்று திறமையான பந்து வீச்சு படையும் உள்ளது. நெருக்கடியின்றி சாதுர்யமாக விளையாடினால் போதும். வெற்றிக்கனியை பறித்து விடலாம். இதே அமீரகத்தில் தான் இந்திய வீரர்கள் சமீபத்தில் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் விளையாடினார்கள். அந்த அனுபவம் உதவிகரமாக இருக்கும். அத்துடன் ஆலோசகராக முன்னாள் கேப்டன் டோனி இருப்பது இன்னொரு பலமாகும். அவர் அணிக்கு நிறைய யோசனைகளை வழங்கியுள்ளார்.

இந்த உலக கோப்பையுடன் 20 ஓவர் அணியின் கேப்டன்ஷிப்பை விட்டு விலகும் விராட் கோலி, உலக கோப்பை கனவை நனவாக்கும் முனைப்புடன் தனது முதல் சவாலை இன்று தொடங்குகிறார்.

பாகிஸ்தான் எப்படி?

எளிதில் கணிக்க முடியாத ஒரு அணி பாகிஸ்தான். உலக கோப்பை போட்டிகளில் தொடர்ச்சியாக இந்தியாவிடம் உதை வாங்கி வரும் பாகிஸ்தான் இந்த முறை அந்த சோகத்துக்கு முடிவு கட்டும் வேட்கையுடன் வியூகங்களை தீட்டி வருகிறது. கேப்டன் பாபர் அசாம், விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வான், பஹார் ஜமான், முகமது ஹபீஸ், சோயிப் மாலிக் ஆகியோர் அந்த அணியின் பேட்டிங் முதுகெலும்பாக உள்ளனர். பந்து வீச்சில் ஷகீன் ஷா அப்ரிடி, ஹாரிஸ் ரவுப் மிரட்டக்கூடியவர்கள்.

பாகிஸ்தான் அணி தங்களது உள்ளூர் போட்டிகளை பெரும்பாலும் அமீரகத்தில் தான் விளையாடுகிறது. இதனால் இங்குள்ள மைதானங்கள், சீதோஷ்ண நிலை நன்கு பழக்கப்பட்டது தான். அந்த வகையில் பாகிஸ்தானுக்கு இது சாதகமான அம்சமாக பார்க்கப்படுகிறது. மொத்தத்தில் சரிசம பலத்துடன் இரு அணிகளும் மல்லுகட்டுவதால் வெற்றி வாய்ப்பு யாருக்கு என்பதை கணிப்பது கடினம்.

ஆனால் சாதனை வகையில் பார்த்தால் இந்தியாவின் கையே மேலோங்கி நிற்கிறது. உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் பாகிஸ்தான் அணி இதுவரை இந்தியாவை வீழ்த்தியதில்லை. 50 ஓவர் உலக கோப்பையில் 7 முறையும், 20 ஓவர் உலக கோப்பையில் 5 முறையும் இந்தியாவிடம் தோற்று இருக்கிறது.

ஒட்டுமொத்த சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் இவ்விரு அணிகளும் இதுவரை 8 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 7-ல் இந்தியாவும், ஒன்றில் பாகிஸ்தானும் வெற்றி கண்டுள்ளன.

பேட்டிங்கில் 6-வது வரிசையில் பாண்ட்யா முக்கியமானவர்:  இந்திய கேப்டன் விராட் கோலி

‘பாகிஸ்தான் வலுவான அணி. அவர்களுக்கு எதிராக விளையாடும் போது ஒவ்வொரு முறையும் மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியாக வேண்டும். ஆட்டத்தின் போக்கை மாற்றக்கூடிய வீரர்கள் அவர்களிடம் உள்ளனர். எனவே நாங்கள் நிச்சயம் மிக உயரிய ஆட்டத்தை களத்தில் காட்ட வேண்டும். ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா 2 ஓவர் பந்து வீசுவதற்கு ஏற்ப உடல்தகுதியை மேம்படுத்தி இருக்கிறார். அவர் பந்து வீசுவதற்கு தயாராகும் வரை அணியில் பகுதிநேர பந்துவீச்சுக்கு சில வாய்ப்புகளை உருவாக்கி உள்ளோம். 6-வது வரிசை பேட்டிங்கில் பாண்ட்யா எவ்வளவு முக்கியமானவர் என்பதை அறிவோம். அந்த வரிசைக்கு அவரை போன்று பங்களிப்பு அளிக்கக்கூடிய வீரரை ஒரே நாள் இரவில் உருவாக்கி விட முடியாது. ஐ.பி.எல். கிரிக்கெட்டுடன் ஒப்பிடும் போது உலககோப்பை போட்டிக்கான ஆடுகளங்கள் சிறப்பானதாக இருக்கும் என்று நம்புகிறேன். போக போக, இந்த தொடரில் பனியின் தாக்கம் முக்கிய பங்கு வகிக்கும்’.

முந்தைய முடிவுகள் குறித்து நினைக்கவில்லை: பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம்

போட்டிக்கு முன்பாக 12 பேர் கொண்ட அணியின் பட்டியலை பாகிஸ்தான் நேற்று வெளியிட்டது. இதில் முன்னாள் கேப்டன் சர்ப்ராஸ் அகமதுக்கு இடம் கிடைக்கவில்லை.

‘உண்மையை சொல்ல வேண்டும் என்றால் கடந்த கால முடிவுகள் குறித்து சிந்திக்க விரும்பவில்லை. சாதனைகள் என்பதே முறியடிக்கக்கூடியது தான். இந்த உலக கோப்பை போட்டியில் சாதிப்பதை எதிர்நோக்கியுள்ளோம். எங்களது பலம், திறமையை குறிப்பிட்ட நாளில் வெளிப்படுத்துவதில் கவனம் செலுத்துகிறோம். பதற்றமின்றி தொடர்ந்து அமைதியாக இருப்பதும், அடிப்படை விஷயங்களை சரியாக செய்வதும் முக்கியம். நல்ல கிரிக்கெட் ஆட்டத்தை வெளிப்படுத்தி சிறந்த முடிவை காண முயற்சிப்போம். எப்போதுமே தொடரில் முதல் ஆட்டம் முக்கியமானது. இதில் சிறப்பான தொடக்கம் கண்டு அதே உத்வேகத்தை தொடர்ந்து எடுத்து செல்வோம் என்று நம்புகிறோம். இங்கு வருவதற்கு முன்பாக பாகிஸ்தான் பிரதமரும், முன்னாள் கேப்டனுமான இம்ரான் கானை சந்தித்து பேசினோம். அவர் 1992-ம் ஆண்டு 50 ஓவர் உலக கோப்பையை வென்ற அனுபவம், அப்போது இருந்த மனநிலை குறித்து எங்களிடம் பகிர்ந்து கொண்டார்.



இரவு 7.30 மணிக்கு...

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

இந்தியா: ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல், விராட் கோலி (கேப்டன்), சூர்யகுமார் யாதவ், ரிஷாப் பண்ட், ஹர்திக் பாண்ட்யா,ரவீந்திர ஜடேஜா, அஸ்வின் அல்லது வருண் சக்ரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, புவனேஷ்வர்குமார் அல்லது ஷர்துல் தாக்குர்.

பாகிஸ்தான்: முகமது ரிஸ்வான், பாபர் அசாம் (கேப்டன்), பஹார் ஜமான், முகமது ஹபீஸ் அல்லது ஹைதர் அலி, சோயிப் மாலிக், ஆசிப் அலி, ஹசன் அலி, ஷதப் கான், இமாத் வாசிம், ஷகீன் ஷா அப்ரிடி, ஹாரிஸ் ரவுப்.

இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.


தொடர்புடைய செய்திகள்

1. டி20 உலகக்கோப்பை அரை-இறுதிப் போட்டி; இங்கிலாந்து 166 ரன்கள் குவிப்பு!
நியூசிலாந்து அணிக்கு எதிரான அரை-இறுதி போட்டியில் இங்கிலாந்து அணி 166 ரன்கள் எடுத்துள்ளது.
2. டி20 உலகக்கோப்பை: அரை-இறுதியில் நியூசிலாந்து முதலில் பந்துவீச்சு தேர்வு!
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெறும் முதலாவது அரைஇறுதி போட்டியில் டாஸ் வென்று நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
3. 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்: தென்ஆப்பிரிக்கா-வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இன்று மோதல்
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெறும் ஆட்டங்களில் தென்ஆப்பிரிக்கா-வெஸ்ட்இண்டீஸ், பாகிஸ்தான்-நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.
4. 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் சூப்பர்-12 சுற்று இன்று தொடக்கம்
20 ஓவர் உலககோப்பை கிரிக்கெட்டில் இன்று தொடங்கும் சூப்பர்-12 சுற்றில் ஆஸ்திரேலியா-தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதுகின்றன.
5. 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்: இலங்கை அணி அறிவிப்பு
16 அணிகள் இடையிலான 7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஓமன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் அடுத்த மாதம் (அக்டோபர்) 17-ந்தேதி முதல் நவம்பர் 14-ந்தேதி வரை நடக்கிறது.