ஐ.பி.எல்.அணியை வாங்குமா...? இங்கிலாந்து மான்செஸ்டர் கால்பந்து கிளப்


ஐ.பி.எல்.அணியை வாங்குமா...? இங்கிலாந்து மான்செஸ்டர்  கால்பந்து கிளப்
x
தினத்தந்தி 25 Oct 2021 7:11 AM GMT (Updated: 25 Oct 2021 7:11 AM GMT)

மான்செஸ்டர் யுனைடெட் அணியின் உரிமையாளர்கள் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு வருகை தந்துள்ளனர்.

துபாய்,

இங்கிலாந்தை சேர்ந்த கால்பந்து கிளப்பான மான்செஸ்டர் யுனைடெட் அணியின் உரிமையாளர்கள் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு வந்துள்ளனர்.

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இதுவரை  8 அணிகள் பங்கேற்று வந்தன. அடுத்த ஆண்டு நடைபெறும் 15-வது ஐ.பி.எல். போட்டியில் கூடுதலாக 2 அணிகள் சேர்க்கப்பட உள்ளன.இதற்கான ஏலம் இன்று மதியத்துக்கு மேல் நடைபெறுகிறது.

ஐ.பி.எல். புதிய அணிகளுக்கான டெண்டர் நடைமுறையை கடந்த ஆகஸ்டு மாதம் இறுதியில் இந்திய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டது. டெண்டர் விண்ணப்ப கட்டணமாக ரூ.10 லட்சம் நிர்ணயம் செய்யப்பட்டது. மொத்தம் 22 நிறுவனங்கள் டெண்டர் விண்ணப்பங்களை வாங்கி இருக்கின்றன. அணியின் அடிப்படை விலையாக ரூ.2 ஆயிரம் கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

22 வணிக நிறுவனங்களில் ஒன்றாக ‘லான்சர் கேப்பிடல்’ நிறுவனம் உள்ளது. அவர்கள் இங்கிலாந்தை சேர்ந்த கால்பந்து கிளப்பான மான்செஸ்டர் யுனைடெட் அணியின் உரிமையாளர்கள் ஆவர். அந்நிறுவனத்தின் முதல்வராக ஏவ்ரம் க்லேசர் உள்ளார். அவர் தற்போது மான்செஸ்டர் யுனைடெட்டின் துணை-சேர்மன் மற்றும் இயக்குநராகவும்  உள்ளார்.

மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்து அணியின் பல்லாயிரக்கணக்கான இந்திய ரசிகர்களை இந்த செய்தி அதிர்ச்சி கலந்த  மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஏற்கனவே, நட்சத்திர கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவை தங்களுடைய கால்பந்து அணிக்காக விளையாட, அந்த அணியின் உரிமையாளர்கள் ஏவ்ரம் க்லேசர் மற்றும் ஜோயல் க்லேசர் வாங்கியுள்ளனர்.

அவர்கள் புதிதாக வர உள்ள இரண்டு ஐ.பி.எல். அணிகளில் ஒரு அணியை கண்டிப்பாக வாங்கிவிட வேண்டும் என்பதில் தீவிர முனைப்பு காட்டி வருகின்றனர்.

இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டு, இந்திய கிரிக்கெட் வாரியம் டெண்டருக்கான அழைப்பு தேதியை அக்டோபர் 5ம் தேதியிலிருந்து அக்டோபர் 10ம் தேதிக்கு மாற்றி வைத்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.இதன்மூலம் உலகளாவிய விளையாட்டு அமைப்பாக ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் மாறியுள்ளது. இவ்வாறு ஐ.பி.எல். நிர்வாகம் தரப்பு தெரிவித்துள்ளது.







Next Story