நியூசிலாந்து வீரர் கப்தில் காயத்தால் அவதி


நியூசிலாந்து வீரர் கப்தில் காயத்தால் அவதி
x
தினத்தந்தி 28 Oct 2021 2:39 AM GMT (Updated: 28 Oct 2021 2:39 AM GMT)

நியூசிலாந்து தொடக்க ஆட்டக்காரர் மார்ட்டின் கப்தில் காயமடைந்தார். காயத்தன்மை எப்படி இருக்கிறது என்பதை பார்த்து அதற்கு ஏற்ப முடிவு செய்வோம் என்று நியூசிலாந்து தலைமை பயிற்சியாளர் கேரி ஸ்டீட் கூறியுள்ளார்.

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் இரவு பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த ஆட்டத்தின் போது நியூசிலாந்து தொடக்க ஆட்டக்காரர் மார்ட்டின் கப்தில் (17 ரன் ) காயமடைந்தார். வேகப்பந்து வீச்சாளர் ஹாரிஸ் ரவுப் வீசிய பந்து அவரது கால்பாதத்தை பதம் பார்த்தது. இதனால் வலியால் அவதிப்படும் அவர் இந்தியாவுக்கு எதிராக வருகிற 31-ந்தேதி துபாயில் நடக்கும் முக்கியமான ஆட்டத்தில் விளையாடுவது சந்தேகமாகியுள்ளது. அவரது காயத்தன்மை எப்படி இருக்கிறது என்பதை அடுத்த 24 மணி முதல் 48 மணி நேரத்திற்குள் பார்த்து அதற்கு ஏற்ப முடிவு செய்வோம் என்று நியூசிலாந்து தலைமை பயிற்சியாளர் கேரி ஸ்டீட் கூறியுள்ளார்.

சூப்பர்-12 சுற்றில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான லீக் ஆட்டம் இரு அணிக்கும் வாழ்வா-சாவா மோதலாகும். ஏனெனில் இந்த பிரிவில் பாகிஸ்தான், தனது முதல் இரு ஆட்டங்களில் இந்தியா, நியூசிலாந்து ஆகிய முன்னணி அணிகளை வீழ்த்தி இருக்கிறது. இனி எஞ்சிய லீக் ஆட்டங்களில் தரவரிசையில் பின்தங்கிய ஆப்கானிஸ்தான், ஸ்காட்லாந்து, நமிபியா ஆகிய அணிகளை தோற்கடித்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் பாகிஸ்தான் அரைஇறுதி வாய்ப்பை வெகுவாக நெருங்கி விட்டது. இந்த பிரிவில் அரைஇறுதி வாய்ப்புக்கான மற்றொரு இடத்திற்கு இந்தியா-நியூசிலாந்து வரிந்து கட்டுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி எஞ்சிய 3 சிறிய அணிகளை தோற்கடித்து விடும் என்பதால் ஏறக்குறைய இது மற்றொரு அரைஇறுதி வாய்ப்பை தீர்மானிக்கும் போட்டியாக அமைந்துள்ளது.


Next Story