தமிழ்நாடு உள்பட 38 அணிகள் பங்கேற்கும் முஷ்டாக் அலி கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் இன்று தொடக்கம்


தமிழ்நாடு உள்பட 38 அணிகள் பங்கேற்கும் முஷ்டாக் அலி கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் இன்று தொடக்கம்
x
தினத்தந்தி 3 Nov 2021 10:01 PM GMT (Updated: 3 Nov 2021 10:01 PM GMT)

தமிழ்நாடு உள்பட 38 அணிகள் பங்கேற்கும் முஷ்டாக் அலி கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் இன்று தொடக்கம்.

மும்பை,

உள்ளூர் போட்டியான 13-வது முஷ்டாக் அலி கோப்பைக்கான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இன்று (வியாழக்கிழமை) முதல் 22-ந் தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடக்கிறது. இதில் பங்கேற்கும் 38 அணிகள் 6 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘எலைட்’ என்று அழைக்கப்படும் ஏ, பி, சி, டி, இ ஆகிய பிரிவுகளில் தலா 6 அணிகள் அங்கம் வகிக்கின்றன. ‘பிளேட்’ பிரிவில் 8 அணிகள் இடம் பிடித்துள்ளன. நடப்பு சாம்பியான தமிழ்நாடு ‘ஏ’ பிரிவில் இடம் பிடித்து இருக்கிறது. பஞ்சாப், ஒடிசா, மராட்டியம், கோவா, புதுச்சேரி ஆகியவை அந்த பிரிவில் உள்ள மற்ற அணிகளாகும். லீக் சுற்றில் ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். லீக் முடிவில் ‘எலைட்’ பிரிவில் முதலிடம் பிடிக்கும் 5 அணிகள் கால்இறுதிக்கு நேரடியாக தகுதி பெறும். எலைட் பிரிவில் 2-வது இடம் பெறும் அணிகள் மற்றும் ‘பிளேட்’ பிரிவில் முதலிடம் பெறும் அணி கால்இறுதிக்கு முந்தைய சுற்றில் மோதும். இதில் வெற்றி பெறும் 3 அணிகள் கால்இறுதிக்குள் நுழையும். கொரோனா மருத்துவ உயிர் பாதுகாப்பு நடைமுறைகளை (பயோ பபுள்) பின்பற்றி நடைபெறும் இந்த போட்டியின் லீக் ஆட்டங்கள் லக்னோ, கவுகாத்தி, பரோடா, டெல்லி மற்றும் அரியானா ஆகிய இடங்களில் நடக்கிறது. ‘நாக்-அவுட்’ சுற்று ஆட்டங்கள் டெல்லியில் அரங்கேறுகிறது.

இந்த போட்டியில் விஜய் சங்கர், என். ஜெகதீசன் (இருவரும் தமிழ்நாடு), ஷிவம் துபே (மும்பை), வெங்கடேஷ் அய்யர் (மத்திய பிரதேசம்), பிரித்வி ஷா (மும்பை), ருதுராஜ் கெய்க்வாட் (மராட்டியம்), தேவ்தத் படிக்கல் (கர்நாடகம்) உள்பட முன்னணி வீரர்கள் பலரும் தங்கள் அணிக்காக களம் இறங்குகிறார்கள். ஐ.பி.எல். போட்டிக்கான மெகா ஏலம் விரைவில் நடைபெற இருப்பதாலும், இந்திய அணியில் இடம் பிடிக்க தேசிய தேர்வாளர்களின் கவனத்தை ஈர்க்கும் நோக்கிலும் சிறப்பாக விளையாட வீரர்கள் முயற்சிப்பார்கள் என்பதால் இந்த போட்டி விறுவிறுப்பு நிறைந்ததாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story