ஜேம்ஸ் நீஷத்தின் அதிரடியால் வெற்றி வாய்ப்பை இழந்தோம் - மோர்கன் வேதனை


ஜேம்ஸ் நீஷத்தின் அதிரடியால் வெற்றி வாய்ப்பை இழந்தோம் - மோர்கன் வேதனை
x
தினத்தந்தி 11 Nov 2021 10:13 PM GMT (Updated: 11 Nov 2021 10:13 PM GMT)

ஜேம்ஸ் நீஷத்தின் அதிரடியான ஆட்டத்தால் வெற்றி வாய்ப்பை இழந்ததாக இங்கிலாந்து கேப்டன் மோர்கன் கூறியுள்ளார்.

அபுதாபி, 

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் நியூசிலாந்துக்கு எதிரான அரைஇறுதியில் ஜேம்ஸ் நீஷத்தின் அதிரடியான ஆட்டத்தால் வெற்றி வாய்ப்பை இழந்தோம் என்று இங்கிலாந்து கேப்டன் மோர்கன் கூறியுள்ளார்.

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் இரவு அபுதாபியில் நடந்த பரபரப்பான முதலாவது அரைஇறுதியில் நியூசிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை தோற்கடித்து முதல்முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. இதில் இங்கிலாந்து நிர்ணயித்த 167 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய நியூசிலாந்து அணிக்கு கடைசி 4 ஓவர்களில் 57 ரன்கள் தேவைப்பட்ட போதிலும் கடைசி கட்டத்தில் ஜேம்ஸ் நீஷத்தின் (27 ரன், 11 பந்து, ஒரு பவுண்டரி, 3 சிக்சர்) தடாலடியும், தொடக்க வீரர் டேரில் மிட்செலின் (72 ரன், 47 பந்து, 4 பவுண்டரி, 4 சிக்சர்) நிலையான ஆட்டமும் நியூசிலாந்துக்கு ஒரு ஓவர் மீதம் வைத்து வெற்றியை தேடித்தந்தது.

தோல்விக்கு பிறகு 35 வயதான இங்கிலாந்து கேப்டன் இயான் மோர்கன் கூறுகையில், ‘நாங்கள் எடுத்த 166 ரன்கள் சவாலான ஸ்கோர் தான். பந்து வீச்சிலும் தொடக்கத்தில் சிறப்பாகவே செயல்பட்டோம். ஜேம்ஸ் நீஷம் களம் இறங்கும் வரை (17-வது ஓவர்) அனேகமாக ஆட்டத்தில் எங்கள் கையே ஓங்கி இருந்தது. நாங்கள் சிக்சர் விளாசுவதில் சிறந்தவர்கள். ஆனால் மந்தமான இந்த ஆடுகளத்தில் சிக்சர்கள் அடிக்க தடுமாறினோம். என்றாலும் ஓரளவு நல்ல ஸ்கோரை பெற்றோம். இப்படிப்பட்ட சூழலில் நீஷத்தின் அதிரடியான பேட்டிங் தான் ஆட்டத்தின் போக்கை மாற்றியது. முதல் பந்தில் இருந்தே அதிரடி காட்டினார். உண்மையிலேயே நன்றாக ஆடினார். எல்லா பாராட்டுகளும் அவரையே சாரும். பனியின் தாக்கம் பெரிய அளவில் இருந்ததாக சொல்ல முடியாது. ஆனாலும் நியூசிலாந்து எங்களை எல்லா வகையிலும் தோற்கடித்து விட்டது’ என்றார்.

இங்கிலாந்து அணியின் கேப்டனாக தொடர்வீர்களா ? என்று கேட்ட போது, ‘கேப்டனாக நீடிப்பேன் என்று நம்புகிறேன். இன்னும் என்னால் அணிக்கு போதுமான பங்களிப்பை வழங்க முடியும். வீரர்களின் அறையில் தொடர்ந்து இருக்க விரும்புகிறேன். எங்களது வீரர்கள் தொடரில் தங்களது முழு திறமையை வெளிக்காட்டினர். ஒரு கேப்டனாக அவர்களை நினைத்து பெருமைப்படுகிறேன்’ என்றார்.


Next Story