கோப்பையை வெல்ல டாஸ் முக்கிய பங்கு வகிக்காது : ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பின்ச்


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 14 Nov 2021 5:32 AM GMT (Updated: 2021-11-14T11:02:41+05:30)

டி20 உலக கோப்பையை வெல்ல வேண்டுமானால் முதலில் பேட்டிங் செய்தாலும், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் வெற்றி பெறலாம்.

துபாய்,

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டம் துபாயில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கிறது. இதில் ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலியா - வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.

முதல் முறையாக 20 ஓவர் உலக கோப்பையை வெல்லப்போவது ஆஸ்திரேலியாவா? நியூசிலாந்து அணியா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். இந்த உலகக்கோப்பை  தொடரில் டாஸ் முக்கிய பங்கு வகிக்கிறது. டாஸ் வெல்லும் அணி பந்துவீச்சை தேர்வு செய்வது வழக்கமாக உள்ளது. 2-வதாக பந்து வீசிய பல அணிகள் பனியின் சிக்கலை எதிர்கொண்டு தோல்வி அடைந்தன.

பெரும்பாலான ஆட்டங்களில் 2-வது பேட்டிங் செய்த அணிகளே வெற்றி பெற்றுள்ளன. இதனால் இன்றைய இறுதிப் போட்டியிலும் சாம்பியன் அணியை டாஸ் முடிவு செய்யுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பாக ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன்பிஞ்ச் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

20 ஓவர் உலக கோப்பையில் சாம்பியன் அணியை டாஸ் முடிவு செய்யாது. டாசினால் ஏற்படும் பாதிப்பை எதிர்கொள்ளலாம். டி20 உலக கோப்பையை வெல்ல வேண்டுமானால் முதலில் பேட்டிங் செய்தாலும், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் வெற்றி பெறலாம்.

பாகிஸ்தானுக்கு எதிரான அரை இறுதி ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்து ரன்களை குவிக்க வேண்டும் என்று கருதினேன். டாஸ் வென்றால் முதலில் பேட்டிங் செய்ய மாட்டோம். அதே சமயம் முதலில் பேட்டிங் செய்ய நேர்ந்தாலும் அதைப்பற்றி கவலையில்லை என இருந்தேன். இதேதான் இறுதிப்போட்டியிலும் எனது நிலையாகும்.

ஐ.பி.எல். இறுதிப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்து சென்னை அணி கோப்பையை வென்றதை பார்த்தோம். முதலில் பேட்டிங் செய்து அதிக ரன் எடுத்து வெற்றி பெற்றது. அதிக ரன்களை குவித்தால் எதிரணி பேட்டிங் செய்யும்போது தவறுகளை செய்ய தூண்டமுடியும். 20 ஓவர் கிரிக்கெட்டில் இலக்கை விரட்டவே அணிகள் விருப்பப்படும். இதில் சில ஆபத்துகளும் உண்டு.

எதிரணி அதிக ரன்களை குவித்துவிட்டால் இலக்கை எடுப்பது கடினம். நியூசிலாந்தை வெல்வது சவாலாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் கூறும்போது, நாங்கள் எங்கள் திட்டப்படி விளையாடுவோம். வீரர்கள் ஒவ்வொருவரும் தங்களின் திறமையை வெளிப்படுத்துவார்கள் என்றார்.


Next Story