இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் தொடர் நடைபெறுமா? கங்குலி பதில்


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 16 Nov 2021 1:31 AM GMT (Updated: 16 Nov 2021 1:31 AM GMT)

ஐ.சி.சி. நடத்தும் உலக கோப்பை உள்ளிட்ட பொதுவான போட்டிகளில் மட்டும் இரு அணிகளும் நேருக்கு நேர் மோதுகின்றன.


துபாய்,

இந்தியா, பாகிஸ்தான் போட்டி என்றாலே எப்போதும் அதிக ரசிகர்களை கவரும். எல்லை பிரச்சினை மற்றும் பயங்கரவாதிகள் தாக்குதல் காரணமாக இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இடையே நேரடி கிரிக்கெட் தொடர் 2012-13-ம் ஆண்டுக்கு பிறகு நடைபெறவில்லை. 

ஐ.சி.சி. நடத்தும் உலக கோப்பை உள்ளிட்ட பொதுவான போட்டிகளில் மட்டும் இரு அணிகளும் நேருக்கு நேர் மோதுகின்றன. சமீபத்தில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் சூப்பர்-12 சுற்று ஆட்டத்தில் இவ்விரு அணிகளும் சந்தித்தன. அதில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

இந்த நிலையில்,  இவ்விரு அணிகள் இடையே மீண்டும் கிரிக்கெட் தொடர் நடைபெறுமா? என்று இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலியிடம் நேற்று  கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் பதிலளிக்கையில், ‘தற்போது  உலக போட்டிகளில் மட்டும் இரு அணிகளும் சந்தித்து வருகின்றன. இரு நாடுகள் இடையிலான கிரிக்கெட் தொடர் பல ஆண்டுகளாக நிறுத்தப்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் இரு நாட்டு கிரிக்கெட் வாரியங்களும் தனிப்பட்ட முறையில் எந்த முடிவுக்கும் வர முடியாது. ரமிஸ் ராஜா (பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர்) கையிலோ அல்லது என்னுடைய கையிலோ எதுவுமில்லை. இது இரு நாட்டு அரசாங்கத்தின் முடிவை பொறுத்ததாகும்’ என்று கங்குலி தெரிவித்தார்.


Next Story