வெற்றிகரமாக முடிக்க முடியாமல் போனது வேதனை அளிக்கிறது: கேன் வில்லியம்சன்


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 16 Nov 2021 3:01 AM GMT (Updated: 16 Nov 2021 3:01 AM GMT)

ஆஸ்திரேலியா ஒரு துளி வாய்ப்பு கூட எங்களுக்கு வழங்கவில்லை

துபாய்,

7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் இரவு துபாயில் அரங்கேறிய இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை தோற்கடித்து மகுடம் சூடியது. 

இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி 4 விக்கெட்டுக்கு 172 ரன்கள் எடுத்தது. கேப்டன் கேன் வில்லியம்சன் 85 ரன்கள் குவித்தார். தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலியா டேவிட் வார்னர் ( 53 ரன்), மிட்செல் மார்ஷ் (77 ரன், நாட்-அவுட்) ஆகியோரின் அரைசதத்தின் உதவியுடன் 18.5 ஓவர்களில் இலக்கை எட்டிப்பிடித்து முதல்முறையாக கோப்பையை கையில் ஏந்தியது.

இறுதிப்போட்டி குறித்து நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் கூறுகையில், ‘ஆட்டத்தின் முதல் பாதி முடிந்த போது நாங்கள் எடுத்த ரன்கள், எதிரணிக்கு சவாலானதாக இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் ஆஸ்திரேலிய அணியினர் பிரமாதமாக ‘சேசிங்’ செய்து விட்டனர். அவர்கள் ஒரு துளி வாய்ப்பு கூட எங்களுக்கு வழங்கவில்லை. ஆனாலும் இந்த உலக கோப்பை போட்டி முழுவதும் ஒரு அணியாக நாங்கள் வெளிக்காட்டிய முயற்சிகளை நினைத்து பெருமைப்படுகிறேன். முடிந்த அளவுக்கு எங்களது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினோம். ஆனால் அது போதுமானதாக இருக்கவில்லை. எங்களது பணியை வெற்றிகரமாக முடிக்க முடியாமல் போனது வேதனை அளிக்கிறது’ என்றார்.

Next Story