20 நிமிடம் தாமதமாக வந்திருந்தால் கூட ...! என்ன நடந்தது என விளக்கும் முகமது ரிஸ்வான்


20 நிமிடம் தாமதமாக வந்திருந்தால் கூட ...! என்ன நடந்தது என விளக்கும் முகமது ரிஸ்வான்
x
தினத்தந்தி 16 Nov 2021 7:10 AM GMT (Updated: 16 Nov 2021 7:10 AM GMT)

கடுமையான நுரையீரல் தொற்று காரணமாக ரிஸ்வான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஐ.சி.யு-வில் இருந்தார்.

துபாய்,

டி20 உலகக் கோப்பையின் இரண்டாவது அரையிறுதியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக முகமது ரிஸ்வான் 67 ரன்கள் குவித்து வீரமிக்க இன்னிங்ஸை விளையாடினார். 

ஆனால் அந்த போட்டிக்கு முன்பாக ரிஸ்வான் ஆடுவதே சந்தேகமாகத்தான் இருந்தது. நுரையீரல் பிரச்சினையினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அரையிறுதி ஆட்டத்துக்கு 2 நாட்கள் முன்பாக மருத்துவமனையில் அவர் சிகிச்சை எடுத்துக் கொண்டார். பின்னர்  ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் களமிறங்கி 52 பந்துகளில் 4 சிக்சர்கள், 3 பவுண்டரியுடன் 67 ரன்களை எடுத்தார் ரிஸ்வான். 

நாட்டிற்காக அற்பணிப்புடன் விளையாடிய முகமது ரிஸ்வானை கிரிக்கெட் வீரர்களும் ரசிகர்களும் வெகுவாக பாராட்டினர். இந்த நிகழ்வு குறித்து முகமது ரிஸ்வான் முதன்முறையாக பகிர்ந்துகொண்டுள்ளார். 

இதுகுறித்து அவர் கூறுகையில், "நான் மருத்துவமனைக்குச் சென்றபோது, ​​​​என்னால் சரியாக மூச்சுவிட முடியவில்லை. நான் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டேன். இதுகுறித்து செவிலியர்களிடம் நான் கேட்டபோது முதலில் என்னிடம் எதுவும் சொல்லவில்லை. பின்னர் ஒரு செவிலியர் ஒருவர் என்னிடம், நீங்கள் 20 நிமிடம் தாமதமாக வந்திருந்தால் உங்கள் இரண்டு மூச்சுக்குழாய்களும் வெடித்திருக்கும் என்று கூறினார். இரண்டு நாள் சிகிச்சை முடிந்த பின் இயல்பாக செயல்பட முடிந்ததால் என்னால் அரையிறுதியில் விளையாட முடிந்தது என்றார்.

முகம்மது ரிஸ்வானுக்கு சிகிச்சை அளித்தது ஒரு இந்திய மருத்துவர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story