பெண்கள் பிக்பாஷ் கிரிக்கெட்:சதம் அடித்து மந்தனா சாதனை
பெண்கள் பிக்பாஷ் கிரிக்கெட்டில் சதம் அடித்த முதல் இந்தியர் என்ற சிறப்பை மந்தனா பெற்றார்.
மெக்காய்,
பெண்களுக்கான பிக்பாஷ் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. மெக்காய் நகரில் நேற்று நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் மெல்போர்ன் ரெனிகட்ஸ்- சிட்னி தண்டர் அணிகள் மோதின. இதில் முதலில் பேட் செய்த மெல்போர்ன் அணி 5 விக்கெட்டுக்கு 175 ரன்கள் குவித்தது. இந்தியாவைச் சேர்ந்த ஹர்மன்பிரீத் கவுர் 81 ரன்கள் எடுத்தார்.
அடுத்து களம் இறங்கிய சிட்னி அணியில் தொடக்க ஆட்டக்காரரான இந்திய மங்கை ஸ்மிர்தி மந்தனா சதம் அடித்தும் பலன் இல்லை.
சிட்னி அணி 20 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 171 ரன்கள் மட்டுமே எடுத்து 4 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. பிக்பாஷ் கிரிக்கெட்டில் சதம் அடித்த முதல் இந்தியர் என்ற சிறப்பை பெற்ற மந்தனா 114 ரன்கள் (64 பந்து, 14 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசி களத்தில் இருந்தார்.
பெண்கள் பிக்பாஷ் கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்கள் எடுத்தவரான ஆஷ்லி கார்ட்னெரின் (சிட்னி சிக்சர்ஸ் அணிக்காக 2017-ம் ஆண்டில் மெல்போர்ன் ஸ்டார்சுக்கு எதிராக 114 ரன்) சாதனையையும் சமன் செய்தார்.
Related Tags :
Next Story