இலங்கைக்கு எதிரான டெஸ்ட்: வெஸ்ட் இண்டீஸ் அணி திணறல்


இலங்கைக்கு எதிரான டெஸ்ட்: வெஸ்ட் இண்டீஸ் அணி திணறல்
x
தினத்தந்தி 22 Nov 2021 5:26 PM GMT (Updated: 22 Nov 2021 5:26 PM GMT)

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி திணறி வருகிறது.

கல்லே,

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்தது. இலங்கை அணியின் கேப்டன் கருணரத்னே அபாரமாக விளையாடி சதமடிக்க, முதல்நாள் முடிவில் இலங்கை அணி 88 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 267 ரன்கள் எடுத்திருந்தது.


இந்நிலையில், இரண்டாம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. கேப்டன் கருணரத்னேவுடன் ஜோடி சேர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சில்வா 61 ரன்களில் ஆட்டமிழந்தார்.தொடர்ந்து பேட்டிங் செய்த இலங்கை அணி  வெஸ்ட் இண்டீஸ் அணியின் சிறப்பான பந்துவீச்சால் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 386 ரன்கள் எடுத்தது. 

இலங்கை அணி தரப்பில் கேப்டன் கருணரத்னே சதமடித்து அசத்தினார். அவர் 300 பந்துகளை எதிர்கொண்டு 15 பவுண்டரிகள் விளாசி 147 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரோஸ்டன் சேஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பதும் நிசங்கா, தனஞ்செயா டி சில்வா ஆகியோர் அரைசதம் கடந்து அசத்தினர். சண்டிமால் 45 ரன்கள் எடுத்தார். வெஸ்ட் இண்டீஸ் அணியில் சிறப்பாக பந்துவீசிய சுழற்பந்துவீச்சாளார் ரோஸ்டன் சேஸ் 5 விக்கெட்டுகளை சாய்த்தார். வாரிகேன் 3 விக்கெட்டுகளையும், கப்ரியேல் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

பின்னர் தனது இன்னிங்ஸ்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான கிரேக் பிராட்வெயிட் 41 ரன்களும், பிளாக்வுட் 20 ரன்களும் எடுத்து அணிக்கு சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். ஆனால் அடுத்து வந்த பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்க ரன்களில் அடுத்தடுத்து வெளியேறினர். இரண்டாம் நாள் முடிவில் அந்த அணி 6 விக்கெட் இழப்பிற்கு 113 ரன்கள் எடுத்துள்ளது. கைல் மயர்ஸ் 21 ரன்களுடனும், ஜேசன் ஹோல்டர் 1 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். 

Next Story