ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை அணி இன்று ஐதராபாத்துடன் மோதல்


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 22 Nov 2021 7:13 PM GMT (Updated: 22 Nov 2021 7:13 PM GMT)

ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் சென்னை அணி தனது முதல் ஆட்டத்தில் இன்று ஐதராபாத்துடன் பலப்பரீட்சை நடத்துகிறது.

கோவா,

8-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி (ஐ.எஸ்.எல்.) கோவாவில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 11 அணிகளும் தங்களுக்குள் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும்.

2 முறை சாம்பியனான சென்னையின் எப்.சி. அணி தனது தொடக்க ஆட்டத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) ஐதராபாத் எப்.சி.யை சந்திக்கிறது. கடந்த சீசனில் 8-வது இடத்துக்கு தள்ளப்பட்ட சென்னை அணி இந்த முறை புதிய தலைமை பயிற்சியாளர் பேசிதார் பாண்டோவிச் வழிகாட்டுதலின் கீழ் அனிருத் தபா தலைமையில் களம் இறங்குகிறது.

போட்டி குறித்து பயிற்சியாளர் பாண்டோவிச் நேற்று நிருபர்களிடம் கூறுகையில், ‘ஒட்டுமொத்தமாக இல்லாமல் ஒவ்வொரு ஆட்டமாக கவனம் செலுத்துவோம். முதலில் நாளைய (அதாவது இன்று) ஆட்டம். அதன் பிறகு தான் அடுத்த ஆட்டம் குறித்து பேசுவோம். ஒவ்வொரு ஆட்டமாக சிறப்பாக விளையாடி டாப்-4 இடங்களுக்குள் வருவதே இலக்கு.

ஐதராபாத் அணியில் சிறந்த வீரர்கள் உள்ளனர். அவர்களுக்கு இந்த லீக்கில் விளையாடிய அனுபவம் இருக்கிறது. ஆனால் நாங்கள் எங்களது பலம் மற்றும் எதிரணியின் பலவீனத்தை சாதகமாக பயன்படுத்திக் கொள்ள முயற்சிப்போம். இது எங்களுக்கு நல்லதொரு ஆட்டமாக அமையும் என்று நம்புகிறோம். போட்டிக்கு தயாராக உள்ளோம். அணியில் நிறைய அனுபவ வீரர்கள் உள்ளனர். அவர்கள் புதிய கேப்டன் அனிருத் தபாவுக்கு வழிகாட்டியாக இருப்பார்கள்’ என்றார். கடந்த ஆண்டு இரு லீக்கிலும் ஐதராபாத்திடம் தோல்வி அடைந்த சென்னை அணி அதற்கு பதிலடி கொடுத்து இந்த சீசனை வெற்றியோடு தொடங்குமா? என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.


Next Story