இலங்கைக்கு எதிரான டெஸ்ட்: தோல்வி பாதையில் வெஸ்ட் இண்டீஸ் அணி


இலங்கைக்கு எதிரான டெஸ்ட்: தோல்வி பாதையில் வெஸ்ட் இண்டீஸ் அணி
x
தினத்தந்தி 24 Nov 2021 9:46 PM GMT (Updated: 24 Nov 2021 9:46 PM GMT)

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டீஸ் அணி தோல்விப் பாதைக்கு தள்ளப்பட்டுள்ளது.

காலே, 

இலங்கை - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி காலேயில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட் செய்த இலங்கை 386 ரன்கள் குவித்தது. 

பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 3-வது நாள் முடிவில் 9 விக்கெட்டுக்கு 224 ரன்கள் எடுத்திருந்தது. இந்த நிலையில் 4-வது நாளான நேற்று வெஸ்ட் இண்டீஸ் அணி எஞ்சிய ஒரு விக்கெட்டையும் இழந்து 230 ரன்களுக்கு ‘ஆல்-அவுட்’ ஆனது. 

அடுத்து 156 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய இலங்கை அணி 4 விக்கெட்டுக்கு 191 ரன்கள் சேர்த்து ‘டிக்ளேர்’ செய்தது. கேப்டன் கருணாரத்னே (83 ரன்), மேத்யூஸ் (69 ரன்) அரைசதம் அடித்தனர். இதன் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 348 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. 

கடின இலக்கை நோக்கி ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி சுழல் தாக்குதலில் சிக்கி 18 ரன்னுக்குள் 6 விக்கெட்டுகளை தாரைவார்த்து தோல்வியின் பாதைக்கு தள்ளப்பட்டது. ஆட்ட நேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 2-வது இன்னிங்சில் 6 விக்கெட்டுக்கு 52 ரன்கள் எடுத்து தள்ளாடுகிறது. கிருமா பொன்னெர் (18 ரன்), ஜோஷூவா டா சில்வா (15 ரன்) களத்தில் உள்ளனர். 

இலங்கை சுழற்பந்து வீச்சாளர்கள் ரமேஷ் மென்டிஸ் 4 விக்கெட்டுகளும், லசித் எம்புல்டெனியா 2 விக்கெட்டும் சாய்த்தனர். கடைசி நாள் ஆட்டம் இன்று நடக்கிறது.

Next Story