வங்காளதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் :8 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி


வங்காளதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் :8 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி
x
தினத்தந்தி 30 Nov 2021 5:47 AM GMT (Updated: 30 Nov 2021 5:47 AM GMT)

பாகிஸ்தான் அணி 2 விக்கெட் இழப்பிற்கு 203 ரன்கள் அடித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

சட்டோகிராம்,

பாகிஸ்தான் - வங்காளதேசம் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சட்டோகிராமில் கடந்த 26 ஆம் தேதி தொடங்கியது . இதில் முதலில் பேட் செய்த வங்காளதேசம் முதல் இன்னிங்சில் 330 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தது. 

பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் அணி , வங்காளதேச சுழலுக்கு ஈடுகொடுக்க முடியாமல்  286 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.பாகிஸ்தான் அணியில் அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர்களான அபித் அலி 133 ரன்களும், அப்துல்லா ஷபிக் 52 ரன்களும் எடுத்தனர். வங்காளதேச இடக்கை சுழற்பந்து வீச்சாளர் தைஜூல் இஸ்லாம் 7 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார்.

44 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய வங்காளதேச அணி 157 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து ஆட்டமிழந்தது.பின்னர் 202 ரன்கள் என்ற இலக்கை நோக்கி 2-வது இன்னிங்சை ஆடிய பாகிஸ்தான் அணி 4-வது நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 109 ரன்கள் எடுத்து இருந்தது.அந்த அணியின் அபித் அலி (56 ரன்), அப்துல்லா ஷபிக் (53 ரன்) களத்தில் இருந்தனர் .

5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் இன்று காலை தொடங்கியது.அபித் அலி 91 ரன்களிலும் , அப்துல்லா ஷபிக்  73 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். பின்னர் களமிறங்கிய அசார் அலி மற்றும் பாபர் அசாம் பாகிஸ்தான் அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றனர். 

இறுதியில் பாகிஸ்தான் அணி 2 விக்கெட் இழப்பிற்கு 203 ரன்கள் அடித்து  8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அசார் அலி 24 ரன்களும் பாபர் அசாம் 13  ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். இதன் மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் பாகிஸ்தான் முன்னிலை வகிக்கிறது.

Next Story