பஞ்சாப் கிங்ஸ் அணியின் உதவி பயிற்சியாளர் ஆன்டி பிளவர் விலகல்


பஞ்சாப் கிங்ஸ் அணியின் உதவி பயிற்சியாளர் ஆன்டி பிளவர் விலகல்
x
தினத்தந்தி 1 Dec 2021 9:58 PM GMT (Updated: 2021-12-02T03:28:28+05:30)

பஞ்சாப் கிங்ஸ் அணியின் உதவி பயிற்சியாளர் ஆன்டி பிளவர் விலகியுள்ளார்.

புதுடெல்லி,

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் உதவி பயிற்சியாளராக செயல்பட்ட ஜிம்பாப்வே முன்னாள் கேப்டன் ஆன்டி பிளவர் அந்த பொறுப்பில் இருந்து விலகியுள்ளார். அவரது ராஜினாமா ஏற்றுக் கொள்ளப்பட்டு இருப்பதாகவும், அடுத்த ஐ.பி.எல்.-ல் புதிய வரவாக இடம் பெறும் ஆமதாபாத் அல்லது லக்னோ ஆகிய இரு அணிகளில் ஏதாவது ஒன்றின் பயிற்சியாளராக அவர் இணைவதற்கு வாய்ப்பிருப்பதாகவும் இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர் தெரிவித்தார். 53 வயதான ஆன்டி பிளவர் கடந்த இரு சீசனில் பஞ்சாப் அணியின் தலைமை பயிற்சியாளர் கும்பிளேவுடன் இணைந்து பணியாற்றி வந்தார்.

பஞ்சாப் கேப்டன் லோகேஷ் ராகுலை தக்கவைக்க அந்த அணி நிர்வாகம் ஆசைப்பட்ட போதிலும் அவர் உடன்படவில்லை. இதனால் விடுவிக்கப்பட்ட ராகுல், அடுத்து லக்னோ அணியில் ஒப்பந்தம் செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆன்டி பிளவரும், லக்னோ அணிக்கு சென்றால் இருவரும் இணைந்து செயல்பட எளிதாக இருக்கும்.

இதற்கிடையே, பஞ்சாப் கிங்ஸ் அணியின் இணை உரிமையாளர் நெஸ் வாடியா அளித்த ஒரு பேட்டியில், ‘லோகேஷ் ராகுல் எங்கள் அணியிலேயே நீடிக்க வேண்டும் என்று விரும்பினோம். ஆனால் அவர் மீண்டும் ஏலப்பட்டியலில் இடம் பெறப்போவதாக கூறி விட்டார். ஆனால் அணியில் இருந்து விடுவிக்கப்படும் முன்பே அவரை மற்றொரு அணி நிர்வாகம் அணுகி இருந்தால் அது இந்திய கிரிக்கெட் வாரியத்தின் வழிகாட்டி நெறிமுறைக்கு எதிரானது. ஆனால் அந்த மாதிரி நடந்திருக்காது என்று நம்புகிறேன்’ என்றார்.

Next Story