சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் டோனிக்கு பிறகு ஜடேஜா கேப்டனாக நியமிக்கப்படுவார் - முன்னாள் வீரர்கள் கணிப்பு


சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் டோனிக்கு பிறகு ஜடேஜா கேப்டனாக நியமிக்கப்படுவார் - முன்னாள் வீரர்கள் கணிப்பு
x
தினத்தந்தி 1 Dec 2021 10:24 PM GMT (Updated: 1 Dec 2021 10:24 PM GMT)

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் டோனிக்கு பிறகு ஜடேஜா கேப்டனாக நியமிக்கப்படுவார் என்று முன்னாள் வீரர்கள் கணித்துள்ளனர்.

சென்னை,

15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியையொட்டி 8 அணிகளும் அதிகபட்சமாக தலா 4 வீரர்களை தக்க வைக்க அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. இதன்படி நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, எதிர்பார்த்தது போலவே ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா (ரூ.16 கோடி ஊதியம்), கேப்டன் டோனி (ரூ.12 கோடி), மொயீன் அலி (ரூ.8 கோடி), ருதுராஜ் கெய்க்வாட் (ரூ.6 கோடி) ஆகியோரை தக்க வைத்தது.

40 வயதான டோனி அனேகமாக அடுத்த ஐ.பி.எல். போட்டியுடன் ஓய்வு பெற்று விடுவார் என்று தெரிகிறது. தவிர முன்பு போல அவரது பேட்டிங் இல்லை. அதனால் தக்கவைக்கப்படும் வீரர்களை வரிசைப்படுத்துவதில் டோனி தனது பெயரை 2-வது இடத்துக்கு கொண்டு சென்றார். இதனால் அவரது ஊதியம் கடந்த சீசனை விட ரூ.3 கோடி குறைந்து விட்டது. அதே சமயம் ஜடேஜாவுக்கு ‘ஜாக்பாட்’ அடித்துள்ளது.

இது குறித்து சென்னை அணியில் இருந்து கழற்றி விடப்பட்ட இந்திய முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா கூறுகையில், ‘நிச்சயம் டோனி தான், ஜடேஜாவுக்கு முன்னுரிமை கொடுத்திருப்பார். அணியில் ஜடேஜாவின் மதிப்பு அவருக்கு நன்கு தெரியும். டோனி ஓய்வு பெறும் போது ஜடேஜா கேப்டனாக நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளது. அவர்கள் வழங்கும் தொகைக்கு ஜடேஜா தகுதியானவர்’ என்றார்.

மற்றொரு இந்திய முன்னாள் வீரர் பார்த்தீவ் பட்டேல் கூறும்போது, ‘சென்னை அணியின் அடுத்த கேப்டன் என்ற அடிப்படையில் தான் ஜடேஜாவுக்கு இவ்வளவு தொகை வழங்கப்படும் என்று நினைக்கிறேன். அவர் அற்புதமான ஒரு வீரர். டெஸ்ட் மற்றும் ஒரு நாள் கிரிக்கெட்டிலும் சிறப்பாக விளையாடி வருகிறார். எனவே டோனி இனி விளையாடப்போவதில்லை என்ற முடிவுக்கு வரும் போது கேப்டன் பொறுப்பை ஜடேஜா ஏற்பார் என்று கருதுகிறேன்’ என்றார்.

Next Story