விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று தொடக்கம்


விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று தொடக்கம்
x
தினத்தந்தி 7 Dec 2021 8:23 PM GMT (Updated: 2021-12-08T01:53:21+05:30)

38 அணிகள் பங்கேற்கும் விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடர் இன்று தொடங்குகிறது.

மும்பை,

20-வது விஜய் ஹசாரே கோப்பைக்கான உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடர் இன்று முதல் வருகிற 27-ந் தேதி வரை நடக்கிறது. இதன் லீக் சுற்று ஆட்டங்கள் மும்பை, கவுகாத்தி, திருவனந்தபுரம், சண்டிகார், ராஜ்கோட், ராஞ்சி ஜெய்ப்பூர் ஆகிய 7 நகரங்களில் நடக்கிறது. ‘நாக்-அவுட்’ சுற்று ஆட்டங்கள் ஜெய்ப்பூரில் அரங்கேறுகிறது.

இந்த போட்டியில் நடப்பு சாம்பியன் மும்பை, 5 முறை சாம்பியனான தமிழ்நாடு உள்பட 38 அணிகள் கலந்து கொள்கின்றன. அவை 6 பிரிவாக பிரிக்கப்பட்டு இருக்கின்றன.

இதில் எலைட் ‘ஏ’ பிரிவில் ஆந்திரா, ஒடிசா, குஜராத், ஜம்மு-காஷ்மீர், இமாச்சலபிரதேசம், விதர்பா, ‘பி’ பிரிவில் மும்பை, தமிழ்நாடு, கர்நாடகா, பரோடா, பெங்கால், புதுச்சேரி, ‘சி’ பிரிவில் டெல்லி, ஜார்கண்ட், அரியானா, ஐதராபாத், சவுராஷ்டிரா, உத்தரபிரதேசம், ‘டி’ பிரிவில் மத்தியபிரதேசம், மராட்டியம், சத்தீஷ்கார், உத்தரகாண்ட், சண்டிகார், கேரளா, ‘இ’ பிரிவில் அசாம், கோவா, பஞ்சாப், ரெயில்வே, ராஜஸ்தான், சர்வீசஸ் அணிகளும், ‘பிளேட்’ பிரிவில் திரிபுரா, நாகலாந்து, மேகாலயா, மணிப்பூர், சிக்கிம், அருணாச்சலபிரதேசம், மிஜோரம், பீகார் ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன.

லீக் சுற்று முடிவில் எலைட் பிரிவில் முதலிடம் பிடிக்கும் 5 அணிகள் நேரடியாக கால்இறுதிக்கு முன்னேறும். ‘பிளேட்’ பிரிவில் முதலிடம் பிடிக்கும் அணி, எலைட் பிரிவில் 2-வது இடம் பிடிக்கும் அணிகள் கால்இறுதிக்கு முந்தைய சுற்றில் மோதும். இதில் வெற்றி பெறும் 3 அணிகள் கால்இறுதியை எட்டும்.

மும்பை-தமிழ்நாடு மோதல்

தொடக்க நாளான இன்று நடைபெறும் முதலாவது லீக் ஆட்டம் ஒன்றில் 4 முறை சாம்பியனான மும்பை அணி, விஜய் சங்கர் தலைமையிலான தமிழக அணியை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டம் கேரள மாநிலம் தும்பாவில் உள்ள செயின்ட் சேவியர்ஸ் கல்லூரி மைதானத்தில் நடக்கிறது. மற்ற லீக் ஆட்டங்களில் கர்நாடகா-புதுச்சேரி, ஆந்திரா-ஒடிசா, குஜராத்-ஜம்மு காஷ்மீர், பரோடா-பெங்கால், டெல்லி-ஜார்கண்ட், ஐதராபாத்-அரியானா, கேரளா-சண்டிகார், பஞ்சாப்-ராஜஸ்தான், ரெயில்வே-சர்வீசஸ் அணிகள் சந்திக்கின்றன. போட்டிகள் காலை 9 மணிக்கு தொடங்குகிறது.

அடுத்த மாதம் ஐ.பி.எல். போட்டிக்கான மெகா ஏலம் நடக்க வாய்ப்பு இருப்பதால் அனைவருடைய கவனத்தையும் ஈர்க்கும் வகையில் வீரர்கள் அதிரடியாக ஆடுவார்கள் என்பதால் இந்த போட்டி மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Next Story