விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் கிரிக்கெட்: தொடக்க ஆட்டத்தில் தமிழக அணி வெற்றி


விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் கிரிக்கெட்: தொடக்க ஆட்டத்தில் தமிழக அணி வெற்றி
x
தினத்தந்தி 8 Dec 2021 10:29 PM GMT (Updated: 2021-12-09T03:59:45+05:30)

விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் போட்டியில் தொடக்க ஆட்டத்தில் மும்பை அணியை வீழ்த்தி தமிழக அணி வெற்றி பெற்றுள்ளது.

திருவனந்தபுரம், 

20-வது விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடர் மும்பை, கவுகாத்தி, திருவனந்தபுரம், ஜெய்ப்பூர் உள்பட 7 நகரங்களில் நேற்று தொடங்கியது. இதில் பங்கேற்றுள்ள 38 அணிகள் 6 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. லீக் சுற்று முடிவில் எலைட் ஏ, பி, சி, டி, இ ஆகிய பிரிவுகளில் முதலிடம் பிடிக்கும் 5 அணிகள் நேரடியாக கால்இறுதிக்கு முன்னேறும். 

பிளேட் பிரிவில் முதலிடம் பிடிக்கும் அணி எலைட் பிரிவில் 2-வது இடம் பிடிக்கும் சிறந்த அணிகள் கால்இறுதிக்கு முந்தைய சுற்றில் சந்திக்கும். இதில் வெற்றி பெறும் 3 அணிகள் கால்இறுதிக்கு தகுதி பெறும்.

இந்த போட்டி தொடரில் எலைட் ‘பி’ பிரிவில் இடம் பிடித்துள்ள 5 முறை சாம்பியனான தமிழக அணி தனது தொடக்க லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பையை எதிர்கொண்டது. ‘டாஸ்’ ஜெயித்த மும்பை அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. 

இதன்படி முதலில் பேட் செய்த தமிழக அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 290 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஷாருக்கான 66 ரன்னும் (35 பந்து, 6 பவுண்டரி, 5 சிக்சர்), பாபா இந்திராஜித் 45 ரன்னும், வாஷிங்டன் சுந்தர் 34 ரன்னும், தினேஷ் கார்த்திக் 32 ரன்னும் சேர்த்தனர். மும்பை தரப்பில் தவால் குல்கர்னி 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதனை அடுத்து ஆடிய மும்பை அணி 46.4 ஓவர்களில் 236 ரன்னில் முடங்கியது. இதனால் தமிழக அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக கேப்டன் ஷம்ஸ் முலானி 75 ரன்கள் எடுத்தார். தமிழக அணி தரப்பில் சுழற்பந்து வீச்சாளர்கள் வாஷிங்டன் சுந்தர், சித்தார்த் தலா 3 விக்கெட்டும், சாய் கிஷோர் 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.


Next Story