பென் ஸ்டோக்ஸ் வீசிய 14 நோ-பால்கள்; ஒரு முறை மட்டுமே நோ-பால் வழங்கியதால் சர்ச்சை


பென் ஸ்டோக்ஸ் வீசிய 14 நோ-பால்கள்; ஒரு முறை மட்டுமே நோ-பால் வழங்கியதால் சர்ச்சை
x
தினத்தந்தி 9 Dec 2021 10:31 AM GMT (Updated: 2021-12-09T16:01:05+05:30)

பென் ஸ்டோக்ஸ் மொத்தமாக 14 நோ-பால்கள் வீசியதாக தெரியவந்துள்ளது. இதில் ஒரு முறை மட்டுமே அம்பயர் நோ-பால் வழங்கியுள்ளார்.

பிரிஸ்பேன், 

ஆஸ்திரேலியா-இங்கிலாந்து  அணிகள் இடையிலான ஆஷ்ஸ் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதலாவது ஆட்டம் பிரிஸ்பேனில் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. அதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் 147 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.

இதனை தொடர்ந்து ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்ய களமிறங்க இருந்த நிலையில் மழை குறுக்கிட்டதால் முதல் நாள் ஆட்டம் பாதியில் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து, 2-ம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியது . இன்றைய தினம் ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கில் தனது ஆதிக்கத்தை செலுத்தி சிறப்பாக விளையாடி 196 ரன்கள் முன்னிலையில் உள்ளது.

இதற்கிடையில் இங்கிலாந்து பவுலர் பென் ஸ்டோக்ஸ் வீசிய நோ-பால் குறித்து சர்ச்சை எழுந்துள்ளது. பென் ஸ்டோக்ஸ் ஒரே ஓவரில் 4 முறை நோ-பால் வீசியதாகவும், அதில் ஒரு முறை மட்டுமே அம்பயர் நோ-பால் வழங்கியதாகவும் தனியார் செய்தி நிறுவனம் ஒன்று செய்தி வெளியிட்டது. ஆனால் இதற்கடுத்து சமூக வலைதளங்களில் வெளியான காணொலி காட்சிகளில் பென் ஸ்டோக்ஸ் மொத்தமாக 14 நோ-பால்கள் வீசியதாக தெரியவந்துள்ளது. இதில் ஒரு முறை மட்டுமே அம்பயர் நோ-பால் வழங்கியுள்ளார். 

புதிய நடைமுறைகளின்படி நோ-பால்களை தேர்ட் அம்பயர்தான் பார்த்துச் சொல்ல வேண்டும். ஆனால் முன் காலை கிரீசுக்கு வெளியே வைத்து போடும் நோ-பால்களைக் கணிக்கும் தொழில்நுட்பம் மேட்சுக்கு முன்னமேயே பழுதானதாக கூறப்படுகிறது. இதனால் விக்கெட் விழும் பந்துகள் நோ-பாலா என்பதைப் பார்க்கும் முந்தைய நடைமுறை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இது பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டியில் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. 
 
இது குறித்து ஐ.சி.சி. முன்னாள் சிறந்த நடுவர் சைமன் டாஃபல் கூறுகையில், “ஒவ்வொரு பந்து வீசப்படும் போதும், எல்லா பந்தையும் நோ-பாலா என்று அவர்கள் செக் செய்ய வேண்டும். என்னால் இங்கு நடப்பதை விளக்க முடியவில்லை.” என்று குறிப்பிட்டுள்ளார்.

Next Story