ரவிசாஸ்திரியின் கருத்தால் நொறுங்கிப்போனேன்: அஸ்வின் வேதனை


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 21 Dec 2021 9:18 PM GMT (Updated: 21 Dec 2021 9:18 PM GMT)

முன்னாள் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி உதாசீனப்படுத்திய நிகழ்வை அஸ்வின் வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.

புதுடெல்லி, 

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளராக திகழும் தமிழகத்தை சேர்ந்த 35 வயதான ஆர்.அஸ்வின் இதுவரை 81 டெஸ்டுகளில் விளையாடி 427 விக்கெட் வீழ்த்தியுள்ளார். இந்திய மண்ணில் அசத்தும் அஸ்வினை, வெளிநாட்டு போட்டிகளில் அடிக்கடி ஓரங்கட்டி விடுகிறார்கள். இந்த நிலையில் தன்னை, முன்னாள் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி உதாசீனப்படுத்திய நிகழ்வை அஸ்வின் வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார். இணையதளம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

2019-ம் ஆண்டு சிட்னியில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்டில் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் 5 விக்கெட் வீழ்த்தினார். அப்போது பேட்டி அளித்த இந்திய தலைமை பயிற்சியாளராக இருந்த ரவிசாஸ்திரி, ‘குல்தீப் யாதவ் தான் வெளிநாட்டில் என்னுடைய சிறந்த சுழற்பந்து வீச்சாளர். ஒவ்வொருவருக்கும் ஒரு நேரத்தில் முடிவு வரும். தற்போது குல்தீப்பின் காலம் தொடங்கி விட்டது’ என்று கூறினார். ரவிசாஸ்திரி மீது நான் மிகுந்த மதிப்பு வைத்துள்ளேன். சில விஷயங்கள் குறித்து சொல்லலாம். பின்னர் அவற்றை திரும்ப பெறலாம் என்பதை புரிந்து கொள்கிறேன். ஆனால் ரவிசாஸ்திரி அவ்வாறு கூறிய அந்த தருணத்தில் நான் மனதளவில் மிகவும் நொறுங்கிப் போய் விட்டேன். அணியின் சக வீரரின் வெற்றியை நாம் ஒருவருக்கொருவர் பகிர்ந்து உற்சாகமாக அனுபவிப்பது எவ்வளவு முக்கியம் என்பது குறித்து பேசுகிறோம். குல்தீப் யாதவ் 5 விக்கெட் வீழ்த்தியது மகிழ்ச்சி தான். நான் கூட ஆஸ்திரேலியாவில் இன்னிங்சில் 5 விக்கெட் எடுத்தது கிடையாது. அதனால் உண்மையிலேயே அவருக்காக மகிழ்ந்தேன். அத்துடன் ஆஸ்திரேலியாவில் அந்த டெஸ்ட் தொடரை கைப்பற்றியது (2-1 என்ற கணக்கில் இந்தியா வெற்றி) மிகப்பெரிய சந்தோஷமான நிகழ்வு.

ஆனால் நான் அவரது மகிழ்ச்சியிலும், அணியின் வெற்றியிலும் பங்கேற்க வேண்டும் என்றால் நான் அங்கு இருப்பதை போல் நினைக்க வேண்டும். ஆனால் என்னை தூக்கி வீசப்பட்டது போல் உணர்ந்த அந்த நேரத்தில் என்னால் எப்படி வெற்றி கொண்டாட்டத்தில் முழு மனதுடன் பங்கேற்க முடியும்? பிறகு மீண்டும் எனது அறைக்கு திரும்பி எனது மனைவியிடம் பேசினேன். அவர் ஆறுதல் கூறினார். குழந்தைகளும் இருந்தனர். பிறகு கவலையை ஒதுங்கி வைத்து விட்டு அணிக்கான விருந்து நிகழ்ச்சியில் என்னை ஈடுபடுத்தி கொண்டேன். ஏனெனில் அது எங்கள் அணியின் மிகப்பெரிய வெற்றியின் கொண்டாட்டம் அல்லவா?

இவ்வாறு அஸ்வின் கூறியுள்ளார்.

Next Story