தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டி - இந்திய அணியை அறிவிப்பதில் தாமதம் ஏன்?


தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டி - இந்திய அணியை அறிவிப்பதில் தாமதம் ஏன்?
x
தினத்தந்தி 28 Dec 2021 4:32 AM GMT (Updated: 28 Dec 2021 4:32 AM GMT)

ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான இந்திய அணி இன்னும் அறிவிக்கப்படவில்லை.

புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்துள்ளது. அங்கு 3 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் களம் காணுகின்றன. இவ்விரு அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி செஞ்சூரியனில் நடைபெற்று வருகிறது. 

இந்த நிலையில், ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான இந்திய அணி இன்னும் அறிவிக்கப்படவில்லை. இந்திய அணியின் புதிய கேப்டனாக பொறுப்பேற்றுள்ள ரோகித் சர்மாவின் உடல் தகுதியை பொறுத்தே 15 பேர் கொண்ட  இந்திய அணி அறிவிக்கப்பட உள்ளது. 

ரோகித் சர்மாவுக்கு இடது கால் தசைபிடிப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக அவர் தேசிய கிரிக்கெட் அகாடமியில் உடற்தகுதி பயிற்சி பெற்று வருகிறார். தற்போதைய நிலவரப்படி அவர் முழு உடற்தகுதியை அடைவதற்கு இன்னும் சில நாட்கள் ஆகலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒருநாள் தொடருக்கான இந்திய அணியை தேர்வு செய்யும் தேர்வுக்குழு கூட்டத்தை இம்மாத இறுதி வரை ஒத்திவைக்க பிசிசிஐ  முடிவெடுத்துள்ளது. 

ஒருவேளை ரோகித் சர்மா காயத்திலிருந்து முழுமையாக குணமாகவில்லையெனில் கே எல் ராகுல் இந்திய அணியை வழி நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், நட்சத்திர வீரர் ரவீந்திர ஜடேஜா மற்றும் அக்சர் பட்டேல் ஆகியோர் காயம் காரணமாக தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்க மாட்டார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக  ஒருநாள் போட்டிகளில் 4 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் ரவிச்சந்திரன் அஸ்வின் சேர்க்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்தில் நிறைவடைந்த விஜய் ஹசாரே தொடரில் சிறப்பாக விளையாடிய ருதுராஜ் கெய்க்வாட், எம் ஷாருக்கான் மற்றும் வெங்கடேஷ் ஐயர் ஆகியோர் ஒருநாள் அணியில் இடம்பெறுவார்கள் என தெரிகிறது. 

Next Story