இரு இன்னிங்சிலும் சதம்: உஸ்மான் கவாஜா புதிய சாதனை!


இரு இன்னிங்சிலும் சதம்: உஸ்மான் கவாஜா புதிய சாதனை!
x
தினத்தந்தி 9 Jan 2022 3:49 AM GMT (Updated: 9 Jan 2022 3:49 AM GMT)

ஆஷஸ் டெஸ்ட் போட்டிகளில் இரண்டு இன்னிங்சிலும் சதம் அடித்த 9-வது வீரர் என்ற பெருமையை பெற்றார்.

சிட்னி,

இங்கிலாந்து-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான ஆஷஸ் தொடரின் 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சிட்னியில் நடந்து வருகிறது. 

இந்த போட்டியின் இரண்டாம் இன்னிங்சில் அபாரமாக ஆடிய உஸ்மான் கவாஜா 131 பந்துகளில் சதமடைத்து சாதனை படைத்துள்ளார். அவர் அடித்த 10-வது சதம் இதுவாகும். முதல் இன்னிங்சிலும் கவாஜா (137 ரன்கள்) சதம் விளாசி இருந்தார். டெஸ்ட் போட்டி வரலாற்றில் இரண்டு இன்னிங்சிலும் ஒருவர் சதம் அடிப்பது இது 87-வது நிகழ்வாகும்.

இதன் மூலம் உஸ்மான் கவாஜா ஆஷஸ் டெஸ்ட் போட்டிகளில் இரண்டு இன்னிங்சிலும் சதம் அடித்த 9-வது வீரர், சிட்னி மைதானத்தில் இத்தகைய சாதனையை படைத்த 3-வது வீரர் என்ற பெருமையை பெற்றார். 35 வயதான உஸ்மான் கவாஜா சுமார் 2½ ஆண்டு இடைவெளிக்கு பிறகு அணிக்கு திரும்பிய முதல் போட்டியிலேயே சாதித்து இருக்கிறார். 

டிராவிஸ் ஹெட் கொரோனாவால் விலகியதால் அவருக்கு பதிலாக உஸ்மான் கவாஜா அணியில் இடம் பிடித்தார் என்பது நினைவுகூரத்தக்கது. இதற்கு முன்பு சிட்னி மைதானத்தில் ஆஸ்திரேலியாவின் டக் வால்டர்ஸ் (1969-ம் ஆண்டு வெஸ்ட்இண்டீசுக்கு எதிராக), ரிக்கி பாண்டிங் (2006-ம் ஆண்டு தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக) ஆகியோர் ஒரு டெஸ்டில் இரு இன்னிங்சிலும் சதம் அடித்து இருந்தனர்.


Next Story