வங்காளதேசத்துக்கு எதிரான டெஸ்ட்: இரட்டை சதத்தை நோக்கி டாம் லாதம்


வங்காளதேசத்துக்கு எதிரான டெஸ்ட்: இரட்டை சதத்தை நோக்கி டாம் லாதம்
x
தினத்தந்தி 9 Jan 2022 6:19 AM GMT (Updated: 2022-01-09T15:11:13+05:30)

முதல் நாள் முடிவில் நியூசிலாந்து அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 349 ரன்கள் குவித்துள்ளது.

கிறிஸ்ட்சர்ச்,

வங்காளதேச கிரிக்கெட் அணி, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இதில் மவுன்ட் மாங்கானுவில் நடந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் வங்காளதேச அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி வரலாற்று வெற்றியை பதிவு செய்தது. டெஸ்ட் போட்டியில் வங்காளதேச அணி, நியூசிலாந்தை வீழ்த்தியது இதுவே முதல்முறையாகும். அத்துடன் நியூசிலாந்து மண்ணில் வங்காளதேச அணி ருசித்த முதல் வெற்றியும் இதுவாகும். 

இந்த நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் இந்திய நேரப்படி இன்று அதிகாலை தொடங்கியது. இதில் டாஸ் வென்ற வங்காளதேச அணி முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது. இதன்படி நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் டாம் லாதமும், வில் யங்கும் களமிறங்கினர். வில் யங் அரைசதம் கடந்து 54 ரன்னில் வெளியேறினார். இதையடுத்து ஆட்டம் முழூவது நியூசிலாந்து அணியின் கட்டுப்பாட்டில் தான் இருந்தது.

இரண்டாம் விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த டாம் லாதமும், கான்வேயும் பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். வங்கதேச பவுலர்கள் பல்வேறு யுக்திகளை பயன்படுத்தியும், இந்த ஜோடியை பிரிக்க முடியவில்லை. 

முதல் நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 349 ரன்கள் குவித்துள்ளது. சிறப்பாக விளையாடிய டாம் லாதம் 186 ரன்களுடன் இரட்டை சதத்தை நோக்கியும், கான்வே 99 ரன்களுடன் சதத்தை நோக்கியும், நாளை நடைபெறும் இரண்டாவது நாளை தொடங்க உள்ளனர்.


Next Story